வரலாற்று சாதனை: கடந்த ஆண்டில் கேரளாவுக்கு 1.88 கோடி சுற்றுலா பயணிகள் வருகை!!
கேரளாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும், இது ஒரு வரலாற்று சாதனை என்றும் மாநில சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் சட்டசபையில் நேற்று தெரிவித்தார். இதுப்பற்றி அவர் கூறுகையில், “2021-ல் பினராயி விஜயன் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தொற்றுநோய் கடுமையாக இருந்தது.
பயணம் சாத்தியமில்லை என்றால், எந்த சுற்றுலாவும் இருக்காது. இதனால் கொரோனா காலகட்டத்தில் கேரள சுற்றுலாத் துறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது” என கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் செயல்படுத்தத் தயாரிக்கப்பட்ட திட்டங்களில் உள்நாட்டு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் அரசாங்கம் அதன் இலக்கை அடைந்தது.
அதன் பலனாக, கேரளாவின் வரலாற்றில் அதிக உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கண்ட ஆண்டாக 2022-ம் ஆண்டு மாறியது. அந்த ஆண்டில் மொத்தம் 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்” என்றார்.