ஜனாதிபதியின் கொள்கை உரை பயனற்றது – ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி!!
ஜனாதிபதியின் கொள்கை உரை பயனற்றது. கொள்கை உரையை மாத்திரம் முன்வைக்கிறாரே தவிர, நடைமுறைக்கு சாத்தியமான எதனையும் அவர் செயற்படுத்தவில்லை.
நாட்டு மக்களின் பணத்தையும், எமது காலத்தையும் வீணடிக்க கூடாது என்பதற்காக ஜனாதிபதியின் அக்கிராசன உரை நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டது.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை உரையை மக்கள் விடுதலை முன்னணியின் புறக்கணித்தமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணி – ஹரினி அமரசூரிய
அரச செலவுகளை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு பல சுற்றறிக்கைகயை வெளியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் நிதி, மற்றும் காலத்தை வீணடிக்கும் வகையில் செயற்படுகிறார். கடந்த ஆறு மாத காலத்திற்குள் பாராளுமன்ற கூட்டத்தொடர் இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் கொள்கை உரையாற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் கொள்கைகளை செயற்படுத்துவதில்லை.
கொள்கை திட்டத்தில் கலந்துக் கொள்வதால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதால் அக்கிராசன உரையை புறக்கணித்தோம்.கொள்ளைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாசங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுகிறார்கள். இதனையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்தார்.
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அதனுடாக தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். நாட்டு மக்கள் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி – திஸ்ஸ அத்தநாயக்க.
அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரை நிகழ்த்தியுள்ளார். 75 ஆவது சுதந்திர தினத்தில் நாட்டு மக்களிடம் குறிப்பிட்ட விடயத்தையே அவர் அரசாங்க கொள்கை உரையில் குறிப்பிட்டார்.
கடந்த ஆறு மாத காலத்திற்குள் பாராளுமன்றக் கூட்டத்தொடர் இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பாராளுமன்ற குழுக்கள் வலுவிழந்துள்ளன.
மீண்டும் குழுக்களை நியமிக்க பல மாதங்கள் செல்லும். ஜனாதிபதியின் செயற்பாடு பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆகவே பயனற்ற கொள்கை உரை நிகழ்வில் கலந்துக் கொள்வது அர்த்தமற்றது என்பதால் ஐக்கிய மக்கள் சக்தியினர் முழுமையாக கூட்டத்தொடரை புறக்கணித்தோம் என்றார்.