வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி – விடுக்கப்பட்டது வேலன் சுவாமிக்கு அழைப்பாணை!
தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் வடக்கில் இருந்து கிழக்கை நோக்கிய மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியை முன்னின்று நடத்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான தாவத் திரு வேலன் சுவாமிகளுக்கு காவல்துறை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது .
“வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியில் கலந்து கொண்டமைக்காக சிறிலங்கா காவல்துறையினரால் குறித்த அழைப்பாணை இன்றைய தினம் மதியம் 1 மணிக்கு யாழ்ப்பாண சிவகுரு ஆதீனத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
சிவில் உடையில் வந்த சிறிலங்கா காவல்துறையினர் இந்த அழைப்பாணையை வழங்கியுள்ளனர்.
‘தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த 4 ம் திகதி ஆரம்பமாகிய மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று (7) வெற்றிகரமாக மட்டக்களப்பில் நிறைவடைந்துள்ளது.
“இலங்கையின் சுதந்திர தினம் – தமிழர்களுக்கு கருப்பு நாள்” என வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட குறித்த மக்கள் பேரணியை குழப்புவதற்கு கடந்த நான்கு தினங்களாக இராணுவ மற்றும் அரச புலனாய்வாளர்களால் பல்வேறு அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் தங்கள் மீது பிரயோகிக்கப்பட்டிருந்ததாகவும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், தற்போது வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் கலந்து கொண்டமைக்காக சிறிலங்கா காவல்துறையினர் தவத்திரு வேலன் சுவாமிகளை இம்மாதம் 20 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
சட்டவிரோதமாக பேரணியில் கலந்து கொண்டதாக தெரிவித்து வேலன் சுவாமிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட 9 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.