2004 முதல் 2014 வரை ஊழல் அதிக அளவில் இருந்தது- காங்கிரசை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!!
பாராளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:- கொரோனா மற்றும் போர் அச்சத்திற்கு இடையே நாட்டை சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். 2004 முதல் 2014 வரை இந்தியாவில் ஊழல் அதிக அளவில் இருந்தது. 2010 காமன்வெல்த் போட்டியில் ஊழல் இருந்ததால் வீரர்களின் திறமையை வெளிப்படுத்த இயலவில்லை. இப்போது ஊழலில் இருந்து நாடு விடுதலை பெற்றுள்ளது. அண்டை நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் உள்ள நிலையில் இந்தியா முன்னேறி வருகிறது. இந்த அரசின் சாதனை இந்திய மக்களை பெருமையில் ஆழ்த்தி உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி உலகளவில் பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையிலும் இந்தியா வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது. ஒருசில நபர்களால் இந்தியாவின் வெற்றியை ஜிரணிக்க முடியவில்லை. ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது அனைவருக்கும் பெருமையான விஷயம். நிர்பந்தத்திற்கு பணிந்து சீர்திருத்தங்கள் தொடர்பான முடிவை எடுக்கும் அரசு அல்ல இந்த அரசு.
சிறந்த முடிவுகளை எடுக்கக்கூடிய தேச நலனில் அக்கறை உள்ள நிலையான அரசு இப்போது உள்ளது. இந்தியா இன்று மிகப்பெரிய வாய்ப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. விலைவாசி உயர்வு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது நிலைமை சிறப்பாக உள்ளதால் சிலரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.