கே.கே.நகரில் கார் கண்ணாடி உடைப்பு விசாரணைக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்- வாலிபர் கைது !!
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சிந்து. இவர் கே.கே நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் மகள் பத்மாவை அழைத்து வருவதற்காக நேற்று மாலை காரில் சென்றார். பின்னர் காரை பள்ளியின் அருகே உள்ள 4வது செக்டார், 20வது தெருவில் சாலையோரம் நிறுத்தி விட்டு பள்ளி வளாகத்துக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து மகளுடன் திரும்பி வந்து சிந்து பார்த்த போது தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது காரின் அருகே உருட்டு கட்டையுடன் நின்று கொண்டிருந்த வாலிபர் ‘என் வீட்டு வாசல் அருகே ஏன் காரை நிறுத்தி விட்டு சென்றாய்’, ‘நான் தான் கண்ணாடியை உடைத்தேன்’ என்று கூறினார். இதை தட்டிக் கேட்ட சிந்துவை தகாதவார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். இதுபற்றி கே.கே.நகர் போலீசுக்கு சிந்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ்காரர் விஜயராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டது அரவிந்த் என்பது தெரிந்தது.
அவரிடம் விசாரித்து கொண்டிருந்தபோது திடீரென போலீஸ்காரர் விஜயராஜையும் கட்டையால் தாக்கி கன்னத்தில் அறைந்தார். இதைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு ரகளையில் ஈடுபட்ட அரவிந்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். எம்.பி.ஏ பட்டதாரியான அரவிந்த் ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் கடந்த ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதான அரவிந்த் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் விளைவித்தல், சட்ட விரோதமாக தடுத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொருட்களுக்கு சேதம் விளைவித்தல், கொலை மிரட்டல் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.