கடலுக்கு நடுவில் பேனா சின்னம் வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்?- நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கேள்வி!!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:- இது ஈ.வே.ரா.வின் மண் என்றும், பெண்ணியம் பேசக்கூடிய மண் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை, திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை. இந்த கட்சிகள் தேர்தல்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
பண பலமும் பதவி பலமும் இருக்கக் கூடிய இந்த அரசியல் களத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்று என்னை இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் பல இருக்கின்றன. குறிப்பாக குடிநீரே இப்போது நஞ்சாக மாறியிருக்கிறது. சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் மாநகரம் இப்போது கேன்சர் சிட்டியாக மாறி வருகிறது.
இதையெல்லாம் முதலில் மாற்ற வேண்டும். அதேபோல் எங்களுக்கு அதிகாரம் வந்தால், மக்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் இழுத்து மூடுவோம். தமிழகத்திற்குள் நுழைந்துள்ள வடமாநிலத்தவர்கள் தமிழர்களை அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காவல்துறை மீதே கைவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் இங்கே வந்து ஏதோ தொழில் செய்கிறார்கள் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் தொழிலை மீறி தவறான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. அவர்களால் ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கிறது.
இதை நிச்சயம் தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அண்ணன் (சீமான்) சொல்வது சரிதான். ஒரு பேனாவைக் கொண்டு கடலுக்கு நடுவில் வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்? கலைஞரின் நினைவாக, மக்களுக்காக அனைத்து வசதிகளையும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை அமைத்து கொடுங்கள். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஐயா கலைஞரை மக்களும் சந்தோஷமாக நினைப்பார்கள். அல்லது, ஐயாவின் நினைவாக பள்ளிக்கூடம் அமைத்துகொடுக்கலாம்.
இதையெல்லாம் மீறி பேனாவைத்தான் வைப்பேன், அதையும் கடலில்தான் வைப்பேன் என்று சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். இந்த விஷயத்தில் அண்ணன் சொல்வது சரிதான். பள்ளிகளை சீரமைக்க பணம் இல்லாதபோது, பேனா வைக்க எங்கிருந்து பணம் வரும்? என்று அண்ணன் கேட்பது நியாயம்தானே? பேனா சின்னம் வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.