சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: ஜோபைடன் நிர்வாகத்தில் வான்வெளி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு!!
அமெரிக்கா வான் பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை வெள்ளை நிறத்திலான மர்ம பலூன் பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் இதை சீனா மறுத்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவின் பேரில் மர்ம பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்கா போர் விமானத்தில் இருந்து ஏவுகணை மூலம் அந்த பலூன் சுடப்பட்டது. இதில் அந்த பலூன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது.
இதையடுத்து கடலோர காவல் படையினர் அதனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பலூனின் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கபட்டது. எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை கிடைத்த சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பலூன் தான் என்றும் அந்த பலூனை சீனா அனுப்பியது சர்வதேச சட்டப்படி குற்றமாகும் என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் வான் வெளி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் சீனாவின் உளவு பலூன் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவித்து உள்ளார். முந்தைய டிரம்ப் நிர்வாகத்தின்போது இது போன்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.