ரஷ்யாவை வீழ்த்த உக்ரைனுக்கு அமெரிக்கா பக்க பலமாக இருக்கும் – பைடனின் அதிரடி உரை! !
சீனா விவகாரம், உக்ரைன் போர் மற்றும் உள்நாட்டுப் பொருளியல் நிலவரம் ஆகியவற்றை மையப்படுத்தி அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் வருடாந்த உரை அமைந்துள்ளது.
குடியரசுக் கட்சி அமெரிக்க மக்கள் அவையைக் கைப்பற்றியதன் பிறகு முதன் முறையாக அதிபர் பைடன் உரையாற்றியுள்ளார்.
குறித்த உரையில், சீனாவின் விவகாரம் மற்றும் உக்ரைன் – ரஷ்ய போர் நிலைமைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
சீனாவின் உளவு பலூன் விவகாரம் பூதாகரமாக வெடித்திருந்த நிலையில், அது தொடர்பில் அதிபர் ஜோ பைடன், சீனா அச்சுறுத்தினால் அமெரிக்கா அதன் அரசுரிமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளதுடன், சீனாவிடம் இருந்து பூசலை அல்ல போட்டியையே அமெரிக்கா எதிர்பார்ப்பதாக தனது உரையில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிந்தளவிற்கு தடுத்து நிறுத்துவதற்கு உக்ரைனுக்கு பக்கபலமாக அமெரிக்கா இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை, பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களையும் உதவிகளையும் அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கி வருவதுடன், உக்ரைனுக்கு தற்காப்பு உதவிகளை அளிப்பதில் அமெரிக்கா மும்முராக இருப்பதாக அமெரிக்க அதிபர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.