உயிர்களை பணயம் வைக்க மாட்டோம் !!
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் அடையாள வேலை நிறுத்தத்தால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் உயிரைப் பணயம் வைக்கும் வேலைநிறுத்தத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், புதன்கிழமை (08) தெரிவித்தது.
புதன்கிழமை (08) காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.
தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கங்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், மருத்துவத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் வரலாற்றில் முதல் தடவையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அவர் கூறினார்.
அவசரகால சேவைகளுக்குச் செல்லும் வைத்திய நிபுணர்களைத் தவிர, நாட்டிலுள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் கடமையாற்றும் வைத்தியர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பாரம்பரியமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாத பிரிவினரும் அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மேலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தயங்கமாட்டோம் என்றார்.