துருக்கி, சிரியாவுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்கள் போய்ச் சேர்ந்தன!!
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. பூகம்பத்தால், இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சி அளிக்கிறது. நவீன எந்திரங்கள் உதவியுடன் கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இடிபாடுகளை தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. துருக்கியில் 10 மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு வார கால தேசிய துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. துருக்கியில் மொத்த பலி எண்ணிக்கை நேற்று 8 ஆயிரத்து 500-ஐ தாண்டியது. இதை துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் தெரிவித்தார். நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டபோது இத்தகவலை கூறினார். அவர் மேலும் கூறியதாவது:- முதல் நாளில் மீட்புப்பணியில் தொய்வு இருந்தபோதிலும், தற்போது நிலைமை சரியாகிவிட்டது. துருக்கியில், 1 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் யாரையும் தெருவில் நிற்கவிட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார். சிரியாவில் 2 ஆயிரத்து 500-க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். அதனால் இரு நாடுகளிலும் மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி விட்டது.
துருக்கியில் 2 டஜனுக்கு மேற்பட்ட நாடுகள் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், பலர் உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 3-வது நாளான நேற்று, கரமன்மராஸ் நகரில் இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கிடையே ஆரிப்கான் என்ற 3 வயது ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. அக்குழந்தையை பத்திரமாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். சில மணி நேரங்கள் கழித்து, அதியமன் நகரில், பேதுல் எடிஸ் என்ற 10 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்டாள். அவளது தாத்தா, கண்ணீர்மல்க முத்தமிட்டு, ஆம்புலன்சில் அனுப்பிவைத்தார்.
துருக்கியில் கூடாரம், ஸ்டவ் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, மீட்புப்பணியில் ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்புப்படையின் 2 குழுக்கள் ஏற்கனவே துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. நேற்று இரவு 3-வது குழு அனுப்பிவைக்கப்பட்டது. 7 வாகனங்கள் மற்றும் 4 மோப்ப நாய்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் 5 பெண்களும் அடங்குவர். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் உள்பட 6 டன் நிவாரண பொருட்களை இந்தியா நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அந்த விமானம், நேற்று காலை சிரியா போய்ச் சேர்ந்தது.
நிவாரண பொருட்களை சிரியா அதிகாரிகளிடம் இந்திய தூதரக அதிகாரி எஸ்.கே.யாதவ் ஒப்படைத்தார். இதுபோல், 30 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி அமைப்பதற்கான ராணுவ தள ஆஸ்பத்திரி தளவாடங்களை சுமந்து கொண்டு 2 விமானப்படை விமானங்கள் நேற்று துருக்கி நாட்டுக்கு போய்ச் சேர்ந்தன. அதில், 54 மருத்துவ பணியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.இதற்கிடையே, துருக்கி மற்றும் சிரியாவுக்கு கப்பல்கள் மூலம் 10 ஆயிரம் நடமாடும் வீடுகள் படிப்படியாக அனுப்பிவைக்கப்படும் என்று கத்தார் அரசு அறிவித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு, ஹைதி நாட்டில் நடந்த 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பலியானதுதான் மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.