உளவு பலூன் விவகாரம்: நாடாளுமன்ற உரையில் சீனாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபையின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உரையாற்றினார். 1 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்த தனது உரையில் நாட்டின் பொருளாதாரம், சீனாவுடனான மோதல், ரஷியா-உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களை குறிப்பிட்டு ஜோ பைடன் பேசினார்.
கொரோனா தொற்று காலத்திலும் அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்ட அவர் உலகின் மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்க பொருளாதாரம் நல்ல வளர்ச்சி நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
அமெரிக்காவுக்குள் சீனா உளவு பலூனை அனுப்பியதையும், அந்த பலூனை ராணுவம் சுட்டு வீழ்த்தியதையும் சுட்டிக்காட்டி பேசிய ஜோ பைடன் “அமெரிக்க நலன்களை முன்னேற்றி உலகிற்கு நன்மை செய்யும் வகையில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன். அதே வேளையில் சீனாவால் நமது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இருந்தால், நாட்டைப் பாதுகாக்க நாங்கள் எதையும் செய்வோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து ரஷியா-உக்ரைன் போர் குறித்து பேசும் போது, “ரஷியாவின் படையெடுப்பு, இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பா சந்தித்த மரணம் மற்றும் அழிவின் உருவங்களைத் தூண்டும் ஒரு கொலைகாரத் தாக்குதல் ஆகும்.
புதினின் ஆக்கிரமிப்பு நீண்டகாலத்துக்கான சோதனை. அமெரிக்காவுக்கான சோதனை. உலகிற்கான சோதனை. புதினின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம். உக்ரைன் மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறோம்” என்றார்.