சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரை மலரும்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு!!
நீங்கள் சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரை மலரும்” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) மாநிலங்களவையில் உரையாற்றினார். அதானி விவகாரத்தில் விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான கோஷங்களுக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். ‘மோடியும் அதானியும் கூட்டு’ (மோடி, அதானி பாய், பாய்) என்று பொருள்படும் வகையில் எதிர்க்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.
பிரதமர் மோடி தனது உரையில் பேசியது: “அவையில் சில உறுப்பினர்களின் நடத்தையும், அவர்களின் பேச்சு தொனியும் ஒட்டுமொத்த தேசத்திற்கே ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் அந்த நபர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரை மலரும். எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி இரைத்து தாமரையை வளரச் செய்வதால் நாங்கள் நன்றி கூறுகிறோம்.
மக்களுக்கு மத்திய அரசு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜன் தன், ஆதார், மொபைல் இணைப்பு மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் பயனாளர்களின் உரிய கணக்குகளுக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எல்லாமே வாய்ஜாலம் தான். 2014 வரை நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு வங்கி சேவை வசதி இல்லை. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு 48 கோடி வங்கிக் கணக்குகளை தொடங்கிக் கொடுத்துள்ளது.
நாங்கள் எந்த தரப்பு மக்களையும் விட்டுவிடவில்லை. பல ஆண்டுகளாக பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றி யாரும் அக்கறை இல்லாமல் இருந்தனர். நாங்கள் அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகிறோம். நாடெங்கிலும் 110 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அங்கு கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற அடிப்படை வசதிகளில் சிறப்பு கவனம் செலுத்தினோம். இதன் வாயிலாக 3 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பயன்பெற்றுள்ளனர்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம். அதேபோல், நமது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் திறமையால் உலக மருந்து துறை மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. கரோனா பெருந்தொற்று உலகை ஆட்கொண்ட போது பிற நாடுகளின் தடுப்பூசிகளை இந்திய சந்தையில் விற்பனை செய்வதற்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. நமது விஞ்ஞானிகளை இழிவுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், நமது இந்திய விஞ்ஞானிகள் நமது நாட்டிலேயே தடுப்பூசிகளை உருவாக்கி 150 நாடுகளுக்கு அதன் பலன்களை வழங்கியுள்ளனர்.
மத்திய அரசின் கொள்கைகள் எல்லாமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணத்தக்கது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு வாக்குறுதிகளை அள்ளி வீசியதை மட்டுமே செய்தது. காங்கிரஸின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கொள்கைகள் ஓட்டு வங்கி அடிப்படையாக கொண்டே உருவாக்கப்படுகிறது.
பாஜக அரசு நாடு முழுவதும் 11 கோடி குடும்பங்களுக்கு சுத்தமான குடி தண்ணீரை உறுதி செய்துள்ளது. 2014-க்கு முன்னர் 3 கோடி பேருக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது. மொத்தத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா 60 ஆண்டுகள் பின்தங்கியது. இந்தியாவை விட சிறிய நாடுகள் எல்லாம் முன்னேறிவிட்டன. ஆனால், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு பாடுப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள்தான் இந்திய வேளாண் துறையின் முதுகெலும்பாக விளங்குகிறார்கள். அவர்களின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் மாநில அரசுகளை தொந்தரவு செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை 90 முறை கலைத்துள்ளனர். ஒரு காங்கிரஸ் பிரதமர் 356 சட்டப் பிரிவை 50 முறை பயன்படுத்தி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல இந்திரா காந்தி.
காந்தி, நேரு குடும்ப பெயரில் 600-க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. ஆனால், அவர் வழி வந்தவர்கள் அவரின் பெயரை பின்னால் சேர்த்துக்கொள்ள ஏன் தயங்குகிறார்கள்? ஜவஹர்லால் நேரு சிறந்த மனிதர். அப்படியிருக்க நேரு என்ற பெயரைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு என்ன அவமானம் நேர்ந்துவிடும்?” என்று பிரதமர் மோடி தனது நீண்ட உரையில் பல்வேறு விஷயங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.