சுதந்திர தினத்தை புறக்கணித்தவர்களா உண்மையான தேசப்பற்றாளர்கள்? – ஐ.தே.க கேள்வி!!
எதிர்க்கட்சியினர் உண்மையில் தேசப்பற்றுடையவர்களாக இருந்திருந்தால் தேசிய சுதந்திர தின நிகழ்வையும், பாராளுமன்ற அமர்வுகளையும் புறக்கணித்திருக்க மாட்டார்கள்.
மக்களின் பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றமையை தாங்கிக் கொள்ள முடியாததன் காரணமாகவே அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் வியாழக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்தரப்பினர் உண்மையில் தேசப்பற்றுடையவர்களாக இருந்தால் தேசிய சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்திருக்க மாட்டார்கள்.
அதேபோன்று உண்மையில் நாட்டை நேசிப்பவர்களாக இருந்திருந்தால் பாராளுமன்ற அமர்வுகளையும் புறக்கணித்திருக்க மாட்டார்கள். நாட்டின் எதிர்காலம் குறித்த பொறுப்புணர்வு காணப்பட்டவர்கள் மாத்திரமே பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டனர்.
அதிகார பேராசை உடையவர்கள் அதனைப் புறக்கணித்துள்ளனர். தற்போது மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றன.
இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்களே இவ்வாறு நடந்து கொள்கின்றனர். வரி எதற்காக அறவிடப்படுகின்றது என்பதை அக்கிராசன உரையில் ஜனாதிபதி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு தற்போது அறவிடப்படுவது புதிய வரி அல்ல. 2019ஆம் ஆண்டு வரை காணப்பட்ட வரியாகும். நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிகம் சம்பளம் பெறுபவர்கள் 5 சதவீதமானவர்களே.
அதேபோன்று 2 சதவீதமானவர்களே 2 இலட்சத்திற்கும் அதிக சம்பளம் பெறுகின்றனர். இவ்வாறிருக்கையில் மிகக் குறைந்தளவானோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காக முழு நாட்டையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குகின்றனர் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”