13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தைரியம் கிடையாது – ஹிருணிகா!!
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தைரியம் கிடையாது.
நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகவே அவர் தற்போது இவ்விடயம் தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தைரியம் கிடையாது.
13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது நாட்டில் ஏற்பட்ட கலவரங்களின் போது அமைச்சராகக் காணப்பட்ட இவர் தற்போது இதனைப் பற்றி பேசுவது நகைப்பிற்குரியது.
நாட்டில் தற்போது நிலவும் உண்மையாக பொருளாதார நெருக்கடிகளை திசை திருப்புவதற்காகவே அவர் தற்போது 13 குறித்து பேசிக் கொண்டிருக்கின்றார்.
13க்கு எதிராக வீதிக்கிறங்கி போராடியதைப் போன்று நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கான தீர்வு கோரியும் போராடுமாறு தலை வணங்களி பௌத்த தேரர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
13 என்பது ஒரு பிரிவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட பிரச்சினையாகும். எனவே அனைத்து மக்களினதும் பிரச்சினையாகக் காணப்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராடுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.
13ஆவது திருத்தம் புதிதாகக் கொண்டு வரப்பட்டதல்ல. அது ஏற்கனவே நடைமுறையிலுள்ள திருத்தமாகும். முதலில் இதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் பின்னர் 13 பிளஸ் பற்றி கவனம் செலுத்தலாம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”