மகாநாயக்க தேரர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்!!
தம்மைத்தாமே நிர்வகிப்பதற்குரிய சுதந்திரத்தை வடக்கு – கிழக்கு வாழ் தமிழ்மக்களுக்கு வழங்காமல், அவர்களை சிங்களவர்களின் காலடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்.
இதனைத்தான் பௌத்தம் உங்களுக்குப் போதித்தா? வடக்கு – கிழக்குவாழ் தமிழர்கள் தனியாகப் பிரிந்து, தமது சொந்த ‘தமிழீழத்தைக்’ கட்டியெழுப்பிவிடுவார்கள் என்று அஞ்சுகின்றீர்கள்.
தமிழர்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டபூர்வ உரித்து சிங்களவர்களுக்கு இல்லை என்பதை அறிந்திருப்பதால்தான் இந்தப் பிளவு குறித்து நீங்கள் கலங்குகின்றீர்களா? என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் 4 பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தமிழ்பேசும் மக்கள் சுமார் 3,000 வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருகின்றனர். நான் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், எமது புராதன வரலாற்றை உத்தியோகபூர்வமாக எழுதுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம், இந்திய வரலாற்றாசிரியர்கள் மற்றும் சர்வதேச வரலாற்றாசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருங்கள் என்றும் அவர் மகாநாயக்க தேரர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் தொடம்பான ஸ்ரீ சந்திரசிறி தேரர் மற்றும் ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்கர் மல்குலாவே ஸ்ரீ விமலதேர் ஆகியோர் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதமொன்றைக் கையளித்திருந்தனர்.
அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை மேற்கோள்காட்டி, அவற்றுக்கு விளக்கமளித்து மேற்குறிப்பிட்ட 4 மகாநாயக்க தேரர்களுக்கும் அனுப்பிவைத்திருக்கும் கடிதத்திலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவரது 10 பக்கக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர், 1940 களில் சிங்கள பௌத்தர்களுக்கும் தமிழ் இந்துக்களுக்கும் இடையில் வலுவான புரிந்துணர்வும், பரஸ்பர நம்பிக்கையும் மேலோங்கிக் காணப்பட்டது. அப்போதைய அநுராதபுர நகரில் அதிக எண்ணிக்கையான தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்தனர்.
குறிப்பாக உடரட்ட சிங்களவர்கள் டொனமூர் ஆணைக்குழுவின் ஆணையாளர்களிடம் சமஷ்டி ஆட்சிமுறையைக் கோரினர். அப்போதைய தமிழ்த்தலைவர்கள் 50:50 ஆட்சிமுறைமைக்குப் பதிலாக சமஷ்டி ஆட்சிமுறையைக் கோரியிருந்தால் நாம் சர்வ நிச்சயமாக சமஷ்டி அரசியலமைப்பொன்றைப் பெற்றிருப்போம்.
அண்மையில் நீங்கள் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பில் சுட்டிக்காட்டுகின்றோம்.
அக்கடிதத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மற்றும் மதரீதியான வணக்கஸ்தலங்களை நிர்வகிப்பதற்கான உரிமை உள்ளடங்கலாக காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவது பிரிவினைக்கு வழிவகுக்கும், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் விளைவாக தோன்றக்கூடிய ஸ்திரமற்றதன்மையைக் கருத்திற்கொண்டு முன்னைய ஜனாதிபதிகள் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கு உண்டு.
அவ்வாறிருக்கையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தக்கூடும், நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார உதவிகளை வழங்குவதாகக்கூறி பலம்பொருந்திய நாடுகளால் முன்வைக்கப்படக்கூடிய நிபந்தனைகள் மற்றும் விருப்பங்களுக்கு அமைவாகச் செயற்படுவதை ஜனாதிபதி தவிர்க்கவேண்டும், ஜனாதிபதி தனது நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள்.
மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் பட்சத்தில், அனைத்து மாகாணசபைகளும் பிரிவினையைக் கோரும் என்று நீங்கள் கூறுகின்றீர்களா? அவ்வாறு நடந்தால் என்ன? சுவிஸ்லாந்தில் 20 உபபிரிவுகளே உள்ளன.
சுவிஸ்லாந்தைப்போன்று அனைத்து மாகாணங்களும் சுதந்திரமாகவும் தனித்தனியாகவும் செயற்படுவதற்கு அனுமதிக்கின்ற முறையை நாமும் கொண்டிருக்கலாம்.
சிங்களவர்களால் நிர்வகிக்கப்படும் மத்திய அரசாங்கத்தின்கீழ் இருப்பதில் தமிழர்கள் திருப்தியடையவில்லை என்றும், அதனால் தம்மைத்தாமே நிர்வகிப்பதற்குரிய சுதந்திரத்தை வடக்கு – கிழக்குவாழ் தமிழ்மக்களுக்கு வழங்காமல், அவர்களை சிங்களவர்களின் காலடியிலேயே வைத்திருக்கவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்.
அத்தகைய எண்ணம்தான் இந்த நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தோற்றுவித்ததல்லவா? இன்னும் எவ்வளவு காலம் இந்த நாடு தமிழர்களுக்கு எதிரான போருக்குத் தயாராகப்போகின்றது? அதனை முன்னிறுத்தி இராணுவத்தினரைத் தயார்நிலையில் வைப்பதற்காக வெளிநாட்டுக்கையிருப்பில் பெருந்தொகையை செலவிடப்போகின்றது? அதேபோன்று சிங்களவர்கள் எதற்காக அஞ்சுகின்றார்கள்? வடக்கு – கிழக்குவாழ் தமிழர்கள் தனியாகப் பிரிந்து, தமது சொந்த ‘தமிழீழத்தைக்’ கட்டியெழுப்பிவிடுவார்கள் என்று அஞ்சுகின்றார்களா? அது எவ்வாறு சிங்களவர்களைப் பாதிக்கும்? வட, கிழக்கில் பெரும் எண்ணிக்கையான சிங்களவர்கள் இல்லை.
அவ்வாறிருக்கையில் தமிழர்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டபூர்வ உரித்து சிங்களவர்களுக்கு இல்லை என்பதை அறிந்திருப்பதால்தான் நீங்கள் இந்தப் பிளவு குறித்து கலங்குகின்றீர்களா? தமிழர்களை அடிபணியச்செய்வதற்கு (கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கு) அவர்கள்மீது அழுத்தமும், வன்முறையும் பிரயோகிக்கப்படவேண்டும் என்று கருதுகின்றீர்கள் அல்லவா? இதனைத்தான் பௌத்தம் உங்களுக்குப் போதித்ததா? அஹிம்சை என்பது இந்து, பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய மதங்களின் மிகமுக்கிய ஆன்மீகக்கோட்பாடாகும்.
செயலால் மாத்திரமன்றி சொல்லாலும், சிந்தனையாலும் கூட எந்தவொரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே அதன் அர்த்தமாகும்.
அவ்வாறிருக்கையில் ஒருபகுதி மக்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய விடயத்தை தேரர்களால் எவ்வாறு போதிக்கமுடியும்? எம்முடைய ஒற்றையாட்சி அரசியலமைப்பின்கீழ் வடக்கு, கிழக்கிற்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிவினைக்கு வழிவகுக்காது.
அதேபோன்று முன்னைய ஜனாதிபதிகளின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் நாட்டில் சிவில் யுத்தமொன்று உருவாவதற்கான அடிப்படைகளைத் தோற்றுவித்ததல்லவா? இலங்கையில் 30 வருடகால யுத்தத்திற்குத் தூண்டுதலளித்த – ‘தமிழர்கள் யுத்தத்தை விரும்பினால் யுத்தம் செய்யட்டும், அவர்கள் அமைதியை விரும்பினால் அமைதியை நாடட்டும்’ என்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் கருத்து முட்டாள்தனமானது அல்லவா? அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் எமது பிரச்சினைக்கான நிரந்தர தீர்வல்ல எனும் அடிப்படையில், முன்னைய ஜனாதிபதிகள் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகியிருக்கும்.
ஆனால் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமையானது தீவிர உறுதிப்பாடின்மையைத் தோற்றுவித்திருக்கின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் 30 வருடகால யுத்தத்தை விடவும் மிகமோசமான எதையேனும் தோற்றுவிக்கின்றதா என்று பார்ப்பதற்காகவேனும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தலாம் அல்லவா?
தமிழ்பேசும் மக்கள் சுமார் 3000 வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவருகின்றனர்.
நான் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், எமது புராதன வரலாற்றை உத்தியோகபூர்வமாக எழுதுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம், இந்திய வரலாற்றாசிரியர்கள் மற்றும் சர்வதேச வரலாற்றாசிரியர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருங்கள் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”