பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மானியமாக கிடைத்த ரூ.50 ஆயிரத்துடன் கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்த 4 பெண்கள்!!
நாட்டில் உள்ள வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக மொத்தம் ரூ.2.50 லட்சம் தரப்படும். முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.
அதை சரிபார்த்து அடுத்தடுத்த தவணைகளில் மீதித் தொகையை தருவார்கள். இந்த திட்டத்தில் குடும்பத்தலைவி வீட்டின் உரிமையாளாராக அல்லது இணை உரிமையாளாராக இருக்க வேண்டும். இந்நிலையில் இந்த திட்டத்தில் முதல்கட்ட மானியமாக கிடைத்த ரூ.50 ஆயிரத்துடன் 4 பெண்கள் கணவர்களை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலர்களுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் பாரா பங்கி மாவட்டத்தில் உள்ள பெல்காரா நகர பஞ்சாயத்து, பாங்கி, ஜைத்பூர் மற்றும் சித்தார் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பெண் பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் இத்திட்டத்தின்கீழ் முதல் கட்ட மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டும் பணிகளை தொடங்கவில்லை. இதையறிந்த திட்டத்தின் மாவட்ட அலுவலர் சுரப்திரிபாதி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். அந்த நோட்டீசுக்கு 4 பெண்களின் கணவன்மார்களும் அதிகாரிகளிடம் நேரில் சென்று பதில் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், முதல் தவணை பணம் ரூ.50 ஆயிரம் எங்கள் மனைவிகளின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது. பணம் கிடைத்ததும் அந்த 4 பேரும் அவர்களின் கள்ளக்காதலர்களுடன் வீட்டைவிட்டு ஓடி விட்டதாகவும், இதனால் நாங்கள் என்ன செய்வதென்று தவிர்ப்பதாவும் கூறியுள்ளனர்.
மேலும் 2-வது தவணை பணத்தை தப்பிதவறி கூட அதே வங்கி கணக்கிற்கு அனுப்பி விட வேண்டாம் எனவும் மாவட்ட அலுவலர் சுரப்திரிபாதியிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே திட்டத்தின் கீழ் 4 பெண்களுக்கும் அனுப்பிய பணத்தை எப்படி வசூலிப்பது என தெரியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.