மகா சிவராத்திரி விழாவிற்கு தயாராகும் காளஹஸ்தி: 13-ந்தேதி கொடியேற்றம்!!
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அதன்படி முதல் நாளான 13-ந் தேதி பிற்பகல் 2 மணியளவில் சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞான பிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்படும். அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், உடுக்கை படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர். அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் அர்ச்சகர்கள் கொடியேற்ற உள்ளனர்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் கோபுரங்கள் வாகன சேவையில் ஈடு படுத்தப்படும் வாகனங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் 4 மாட வீதிகளில் தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன. 2-வது நாள் காளஹஸ்தி சிவன் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது இதையடுத்து 15-ந் தேதி காலை பூத வாகன சேவையும் மாலை சுக வாகன சேவையும் நடைபெறுகிறது. 16-ந் தேதி காலை ராவண வாகன சேவையும், மாலை மயூர வாகன சேவையும் 17ஆம் தேதி சேஷ வாகன சேவையும் மாலை யாழி வாகனமும் 18-ந் தேதி மகா சிவராத்திரி அன்று லிங்கோத்ஷவமும், மாலை இந்திர விமான வாகன சேவையும், 19-ந் தேதி முக்கிய நிகழ்வாக ரத உற்சவம் நடைபெறுகிறது.
மாலை கோவில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. 20-ந்தேதி சிவ பார்வதி திருக்கல்யாணமும், 21-ந் தேதி சபாபதி திருக்கல்யாணமும், 22ந் தேதி கிரி பிரதக்ஷனா நடைபெறுகிறது.23-ந் தேதி யாத்ரிகர் துவாரஜனம் நடைபெற உள்ளது. 26 ஆம் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நித்திய பூஜைகளுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. பிரமோற்சவ விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சமூக விரோத கும்பலை கண்காணிக்க கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பு வதற்காக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.