இந்தியாவையும் குறிவைக்கும் சீன உளவு பலூன் – பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்காவின் எச்சரிக்கை !!
அமெரிக்கா மட்டுமின்றி, சீனா அதன் உளவு பலூன்கள் மூலம் இந்தியா, ஜப்பான் உட்பட பல நாடுகளையும் கண்காணித்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு கரோலினா கடற்கரையில் ஒரு போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனின் கண்டுபிடிப்புகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இந்தியா உட்பட அதன் நட்பு நாடுகளுக்கு விளக்கமளித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள சுமார் 40 தூதரகங்களுக்கு துணை வெளியுறவு செயலாளர் வெண்டி ஷெர்மன் ஆற்றிய உரையில், சீன கண்காணிப்பு பலூன், ஹைனான் மாகாணத்திற்கு வெளியே பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு, பல நாடுகளின் இராணுவ சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த கண்காணிப்பு பலூன், ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சீனாவின் வளர்ந்து வரும் மூலோபாய ஆர்வமுள்ள நாடுகள் மற்றும் பகுதிகளில் உள்ள இராணுவ சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம், அமெரிக்காவில் உள்ள அணுசக்தி ஏவுதளம் உள்ளிட்ட மூலோபாய இடங்களில் சீன உளவு பலூன் பறந்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அது சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.