கூகுள் நிறுவனம் உருவாக்கிய பார்டு ஏ.ஐ. சாட்பாட் தவறான பதில்: ஆல்பபெட்டின் சந்தை மதிப்பு 9% சரிவு.. ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு..!!
இணைய உலகை ஆள வரும் சாட்ஜிபிடிக்கு போட்டியாக BARD சாட்பாட்டை அறிமுகம் செய்த கூகுள் முதல் அடியிலேயே சறுக்கியதால் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஒரே நாளில் 10 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. வரும் காலத்தில் உலகை ஆளப்போவதாக கருதப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தேடுபொறி துறையிலும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பெறும் பணக்காரர் எலான் மஸ்க்கை ஒரு நிறுவனராக கொண்டு தொடங்கப்பட்ட OPEN AI நிறுவனம் உருவாக்கிய சாட்ஜிபிடி மென்பொருள் கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது.
கூகுள் தேடுபொறிக்கு சவால்விடும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்டான சாட்ஜிபிடி, இணைய உலகில் வரவேற்பை பெற்று வருகிறது. சாட்ஜிபிடியை தனது தேடுதல் பொறியான பின்க்கில் இணைத்து லாபம் ஈட்ட மைக்ரோ சாப்டும் களத்தில் இறங்கியுள்ளது. ஆரம்பக்கட்டத்திலேயே சுதாரித்துக்கொண்ட கூகுள் நிறுவனம், சாட்ஜிபிடிக்கு போட்டியாக BARD என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
தேடுபொறி துறையில் ராஜாவாக இருக்கும் தங்களுக்கு போட்டியாக யாரும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் BARD சாட்பாட்டை அறிமுகம் செய்த கூகுளுக்கு முதல் அடியே சருக்கலாக அமைந்துள்ளது. ஜேம்ஸ் வெப் டெலஸ்க்கோப்பின் புதிய கண்டுபிடிப்புகளை பற்றி 4 வயது குழந்தைக்கு என்ன சொல்வது? என்ற கேள்விக்கு BARD AI சாட்பாட் தவறான தகவலை அளித்ததே தற்போது பேசுபொருளாக உள்ளது.
அதுவும் BARD அறிமுகம் குறித்து விளம்பரப்படுத்திய ட்விட்டர் பதிவிலேயே தவறான பதில் அளித்த காட்சி துணுக்கு இடம்பெற்றது. தவறு கண்டறியப்பட்ட உடன், யூ டியூப் மற்றும் ட்விட்டரில் அந்த காட்சி துணுக்கு நீக்கப்பட்டது. கூகுளின் புதிய சாட்பாட் இணையவாசிகளின் கேலி கிண்டலுக்கு ஆளாகி வரும் நிலையில், கூகுள் தாய் நிறுவனமான ஆல்ப்பெட்டின் சந்தை மதிப்பு சரிந்து ஒரே நாளில் 10 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது.