;
Athirady Tamil News

‘டிஜிட்டல்’ இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் நிலை என்ன?: கனிமொழி கேள்வி!!

0

தி.மு.க. எம்.பி. கனிமொழி மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரியிடம், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு இணக்கமான தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கு அரசிடம் ஏதேனும் கொள்கை முடிவு உள்ளதா?, மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமாக இருக்கும் வகையில் சோதிக்கப்பட்ட அரசு செயலிகள் மற்றும் இணையதளங்களின் விவரங்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளை எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி பதில் அளித்துள்ளார். அவருடைய பதிலில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு 19.4.2017 அன்று முதல் நடைமுறைக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தை (2016) இயற்றியுள்ளது.

இந்த சட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதில் பார்வை மற்றும் பிற குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அமைப்புகளில் தடையில்லாத சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் படி பொது கட்டிடங்கள், பஸ் போக்குவரத்து, இணைய தளங்கள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான நிலையில் பராமரிக்க வேண்டும்.

இந்த விதிகளின்படி அனைத்து அரசு இணைய தளங்களும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க இயங்க வேண்டும் என்பதை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறை கவனித்துகொள்கிறது. மேலும் இந்திய தரநிலைகள் பணியகம் தகவல், தொடர்பு தொழில் நுட்பத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் மாற்றுத்திறனாளிகளின் அணுகல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக முறையே 24.12.2021 மற்றும் 4.5.2022 என இருமுறை அறிவிக்கைகளை வெளியிட்டு உள்ளது.

மேலும், 2017-18-ம் ஆண்டில், உள்ளடக்க மேலாண்மை கட்டமைப்பின் கீழ், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் 95 இணையதளங்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அமைக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 632 இணையதளங்களையும் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடியதாக மாற்றி உள்ளது. மேலும், ‘சுகம்யா பாரத் ஆப்’ என்ற ‘க்ரவுட் சோர்சிங் மொபைல்’ செயலியை அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி பொது மைய கட்டமைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும்போது எதிர்கொள்ளும் அணுகல் தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவுகிறது. எவரும், எங்கும், எந்த நேரத்திலும் பயன்படுத்துவதை இந்த செயலி உறுதிபடுத்துகிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.