தமிழ்நாட்டில் ஆண்களைவிட அதிக பெண்கள் வேலை கேட்டு காத்திருக்கிறார்கள்- மொத்தம் 67 லட்சம் பேர் பதிவு!!
தமிழகம் முழுவதும் 67 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ள நிலையில் அதில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேர் வேலை கேட்டு காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்துள்ளவர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தங்களது வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர்.
குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மொத்தம் 31 லட்சத்து 49 ஆயிரத்து 398 ஆண்களும், 36 லட்சத்து 9 ஆயிரத்து 27 பெண்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 273 பேர்களும் பதிவு செய்து வேலைவாய்ப்புக்கு காத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதில் 46 வயது முதல் 60 வரை வயது முதிர்வு பெற்றவர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 155 பேர் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவர்கள் மட்டும் மொத்தம் 29 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள்.