;
Athirady Tamil News

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க தகுதி இல்லை- எடப்பாடி பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!!

0

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி என்பது அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தி.மு.க. தலைமை காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது போல அ.தி.மு.க. ஏன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை? இதைவிட கூட்டணி தர்மத்திற்கு உலை வைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழ் மாநில காங்கிரசை ஒரு கட்சியாகவே கருதாமல் அலட்சியப் போக்கோடு ஈரோடு கிழக்கு தொகுதியை அ.தி.மு.க. அபகரித்துக்கொண்டது. இதுதான் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளை நடத்துகிற விதம். இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை தி.மு.க. அடிமைப்படுத்தி நடத்துகிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சார கூட்டத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை மிகுந்த சுயமரியாதையோடு, சுய சிந்தனையோடு செயல்பட்டு வருகிறோம். ஆனால், அ.தி.மு.க.வை பொறுத்தவரை யார் காலில் விழுந்து, எப்படி பதவி பெற்றார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இத்தகைய அடிமைத்தன அரசியல் நடத்தியவர்கள் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.