;
Athirady Tamil News

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது!!

0

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்கு சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வரி விதிப்பு செய்யப்பட்டது நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அறியாமல் அல்ல என்றும் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு நடத்தும் நோக்கிலேயே அத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதேபோல வெகு விரைவில் நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்க முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் முதன்முறையாக பொருத்தப்பட்ட Hyundai Grand i10 மோட்டார் வாகனத்தை சந்தையில் அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (10) கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டு விடும் என்ற நம்பிக்கை இத்தகைய முதலீடுகளால் உறுதி செய்யப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் Hyundai Grand i10 வாகனத்தை சந்தைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகள் எமது நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கை மென்மேலும் உறுதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையிலுள்ள அபான்ஸ் ஒட்டோ நிறுவனம் மற்றும் கொரியாவின் ஹூன்டாய் மோட்டார் நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த மோட்டார் வாகனம் சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்சாலையொன்றில் பொருத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் வாகனங்களை பொருத்துதல் மற்றும் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்தல் ஆகிய துறையில் இந்நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

Hyundai Grand i10 ஐ இலங்கையில் பொருத்துவதென்பது பெஸ்டென்ஜி அம்மையார் எடுத்த தீர்மானத்துக்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.1977இல் திறந்த பொருளாதாரம் அறிமுகம் செய்யப்பட்டபோது அவர் இந்தப் பயணத்தை ஆரம்பித்த விதம் எனக்குத் தெரியும். அன்று நான் 5ஆவது ஒழுங்கையூடாக காலி வீதிக்கு வரும் வழியில் அபான்ஸ் காட்சியறையொன்று இருந்தமை எனக்கு ஞாபகம் வருகிறது. இன்று நீங்கள் அந்த இடத்திலிருந்து இந்நிலைக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் செய்தவற்றுக்கு மிக்க நன்றி.

தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் காணப்படும் ஒத்தழைப்பு போலவே கொரியாவிலிருந்து பெரும் அளவிலான முதலீடுகள் எமது நாட்டுக்கு கிடைப்பதனால் இது ஏனைய முதலீட்டாளர்களின் வருகைக்கும் சிறந்த ஆரம்பமாக இருக்குமென நான் நம்புகின்றேன்.

விசேடமாக Hyundai Grand i10 வாகனத்தை சந்தைப்படுத்துவதென்பது எமது நாட்டின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதி செய்வதாக அமையும்.

எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இது போன்றதொரு வாகனத்தை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்த அபான்ஸ், ஹூன்டாய் ஆகிய நிறுவனங்களுக்கும் பெஸ்டென்ஜி அம்மையாருக்கும் எனது நன்றிகள்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலேயே இந்த வாகனம் அறிமுகம் செய்யப்படுகிறது. எனினும் இந்நாட்டின் பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற நம்பிக்கையுடனேயே அவர்கள் இதனை முன்னெடுத்துள்ளார்கள். இந்த நம்பிக்கைக்காக நான் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த வருடம் எமது நாட்டின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைந்திருந்த பின்னணியில் மிகவும் கடினமான கால கட்டத்திலேயே நாம் 2023ஆம் ஆண்டை ஆரம்பித்தோம்.

எனினும் நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுப்பெற்று வருகிறது. அதற்கமைய எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. இதேபோல் இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.

இம்முறை பெரும்போகத்தின்போது நாம் மிகச் சிறந்த அறுவடையை எதிர்பார்கின்றோம். அது மட்டுமன்றி 20 மில்லியன் ரூபாவுக்கு நெல்லை விலைக்கு வாங்கி, அதனை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கிடையே பகிர்ந்தளிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக நாம் இதுபோன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இது போலவே ஐ.எம்.எப் நிறுவனத்துடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கும் எம்மால் முடிந்துள்ளது. பெரிஸ் சமூகம், இந்தியா மற்றும் சீனாவுடன் கலந்துரையாடலை முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன் அவர்களுக்கிடையே காணப்படும் வித்தியாசமான முறைமைகளை தீர்ப்பது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அதற்கமைய, அடுத்த சில மாதங்களில் தற்போது இருப்பதிலும் பார்க்க பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, எதிர்வரும் ஆண்டாகும் போது மீண்டும் கார்களை கொள்வனவு செய்யக்கூடிய நுகர்வோர் குழுவொன்று நாட்டில் உருவாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சந்தைப்படுத்தல் இல்லை என்றால் வர்த்தகர்கள் பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக நீங்கள் நினைத்தால், சந்தைப்படுத்தல் இருப்பதாக நீங்கள் நினைக்க மாட்டீர்கள்.

அப்படியானால், எமது பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதன் காரணமாகவே இதுபோன்ற முதலீடுகள் வருகின்றன.

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் செல்லும் இந்த ஒழுங்கு முறையின் கீழ் பல்வேறு தீர்மானங்களை எமக்கு எடுக்க நேரிடும். அதில் சில கடினமான தீர்மானங்களையும் எடுக்க நேரிடும். அவை பிரபலமற்ற தீர்மானங்களாக இருக்க முடியும்.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மக்கள் முகம் கொடுத்துள்ள சிரமங்கள் குறித்து நான் அறிவேன். அதுபோலவே வரி அதிகரிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமம் குறித்தும் நான் அறிவேன். சிலரது சம்பளத்தில் வரி மற்றும் கடனைச் செலுத்திய பின்னர் மிகச் சிறிய தொகையே எஞ்சுகின்றது. இந்த கஷ்ட்டத்தை இன்னம் சில காலத்துக்கே நீங்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டை முன்னேற்ற வேண்டும். எனினும் அதுபோன்ற சில தீர்மானங்களை எடுக்காவிட்டால் நாடு இந்நிலையில் இருக்க முடியாது.

அதுபோலவே எதிர்காலத்தில் அனைத்து அரசியல் தலைவர்களும் இதுபோன்ற தீர்மானங்களை எடுப்பார்கள் என நம்புகின்றேன். எம்மால் பிரபலமான தீர்மானங்களை எடுக்க முடியும். எனினும் அவற்றால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

சிங்கப்பூர் இதற்கு மிகச் சிறந்த உதாரணம் ஆகும். அதன் பிரதமர் லீ குவான் யூ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபலமான தீர்மானங்களை எடுக்கவில்லை. அவர் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார். அத்தீர்மானங்களை ஏற்றுக் கொண்ட மக்கள் அவருடன் இணைந்து பணியாற்றினர். அதுபோலவே தென் கொரியாவிலும் ஆட்சியாளர்கள் நாட்டுக்காக கடினமான தீர்மானங்களை முன்னெடுத்தனர். ஐரோப்பாவிலும் அதே நிலைமையே காணப்பட்டது.

எமது நாட்டின் எதிர்காலத்துக்காக இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த நாட்டைப் பெற்றுக் கொடுப்பதற்காக எமக்கு இத்தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது. வெகு காலம் செல்வதற்கு முன்னர் இந்நாட்டின் பொருளாதாரத்தை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியுமென நான் எதிர்பார்கின்றேன்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியொங் (Santhush Woonjin JEONG), முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, அபான்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, ரெசி பெஸ்டொன்ஜி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.