21,000-ஐ கடந்த துருக்கி சிரியா உயிரிழப்புகள் – உலகவங்கி எடுத்த உடனடி நடவடிக்கை !!
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் திகதி அடுத்தடுத்து 7.8 ரிக்டர் , 7.5 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
இதனை தொடர்ந்து இரவில் 3வது நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாயின.
துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளும் , சிரியாவின் வடக்குப் பகுதி என்பன மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் தற்போதைய உயிரிழப்புகள் எண்ணிக்கை அந்நாட்டு அரசு வெளியிட்ட தகவலுக்கமைய 21,000-ஐ கடந்து விட்டது.
துருக்கியில் மட்டும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,377 ஆக அதிகரித்துள்ளது.
சேதமடைந்த கட்டிட இடிபாடுகளை மீட்பு படையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்து துருக்கி சென்றுள்ள மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சிலநாடுகள் நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளன. அமெரிக்காவும் மீட்புப் பணிகளில் துருக்கி, சிரியாவுக்கு உதவி வருகிறது.
உலக வங்கி சார்பில் 1.18 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
துருக்கியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ 72 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
குறித்த குழுவோடு இணைந்து 22 டொன் அத்தியாவசிய உபகரணங்கள் மற்றும் முக்கியமான பொருட்களையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6.9 மில்லியன் டொலர்களை அவுஸ்திரேலியா உதவியாக வழங்க உள்ளதாக அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நியூசிலாந்து, துருக்கி மற்றும் சிரியாவில் மனிதாபிமான முயற்சிகளுக்கு 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது.
இவ்வாறு உலக நாடுகளினால் வழங்கப்படும் பணம் துருக்கியில் உள்ள உலக உணவு திட்டத்திற்கும், சிரியாவில் உள்ள யுனிசெப் நிறுவனத்திற்கும் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.