ராமேசுவரம் அருகே கடலில் வீசப்பட்ட 17.74 கிலோ தங்க கட்டிகள் மீட்பு: தங்கம் கடத்தலில் அரசியல்வாதிக்கு தொடர்பு? !!
ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் இங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், கடல் அட்டை, பீடி இலை, கடல் குதிரை, உரங்கள் உள்ளிட்டவை கடல் வழியாகக் கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தங்க கட்டிகள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மாவட்ட காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தினமும் 24 மணி நேரம் படகில் ரோந்து சென்று கடத்தல்காரர்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இருந்தபோதிலும், அவர்களது கண்காணிப்பையும் மீறி கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மத்திய-மாநில உளவுப்பிரிவினர், இந்திய கடலோர காவல்படை, இந்திய கடற்படை, சுங்கத்துறையினர், போலீசார் கண்காணிப்பில் இருந்தும் கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை.
சமீப காலமாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினரே அவ்வப்போது பெரிய அளவிலான தங்கம் கடத்தல், போதைப்பொருள் கடத்தலை கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்தின் நுண்ணறிவு தகவலின் அடிப்படையில், இந்திய கடலோரக் காவல்படை, மண்டபத்தில் கூட்டுக்குழு அமைத்து மன்னார் வளைகுடா பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் ஏதேனும் உள்ளதா? என கடந்த 2 நாட்களாக கண்காணித்து வந்தனர். கடந்த 8-ந் தேதி இரவு இந்தக்குழு, சந்தேகத்திற்கு இடமாக ஒரு படகு வந்ததை கண்டுபிடித்தது. அதிலிருந்த மர்ம நபர்கள் போலீசார் தங்களை நோக்கி வருவதைக் கண்டதும், அவர்களிமிடமிருந்து தப்பிக்க படகை அதிவேகமாக செலுத்தினர்.
அவர்களை கூட்டுக்குழு, விரட்டிச் சென்று பிடித்தது. படகில் சோதனையிட்ட போது, சட்டவிரோத கடத்தல் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. அவர்கள் கடத்திவந்த தங்கக் கட்டிகளை கடலில் வீசியது தெரியவந்தது.இதனையடுத்து இந்திய கடலோரக் காவல்படைக் குழு, குறிப்பிட்ட ஒரு பகுதியில் கடலில் மூழ்கி கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தியதில், 17.74 கிலோ தங்கம் இருந்த மூட்டை கண்டு பிடிக்கப்பட்டது. அதனை, மீன்பிடி படகில் கடத்தி வந்த மண்டபம் பொங்காலி தெருவைச் சோ்ந்த நாகூா்கனி (வயது 30), அன்வா் (25), மன்சூா்அலி (25) ஆகிய 3 பேர் பிடித்துச் செல்லப்பட்டு, மேலும் சட்ட நடவடிக்கைக்காக மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையடுத்து 3 பேரிடம் தொடர்ந்து ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை குறித்து கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் எவ்வித தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் செல்லாத வகையில் குறிப்பிட்ட இடங்களில் மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியதும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பின்னர் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மீறி சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் பைபர் படகில் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய-மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.