;
Athirady Tamil News

தெருவில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம்- விதிமுறையை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு!!

0

சென்னை மாநகரில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதை யாரும் குற்றமாக கருதுவது இல்லை. ஆனால் மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்க முடியும். இதனை மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதற்காகவே சென்னை மாநகரில் பல இடங்களில் பொது கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் பெரும்பாலானோர் அதனை பயன்படுத்துவதில்லை. ஒதுக்கு புறமான இடங்களில் நின்று சிறுநீர் கழிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனால் ஒவ்வொரு பகுதியிலும் ‘மூத்திர சந்து’ என்ற பெயரால் ஏதாவது ஒரு இடம் நிச்சயம் இருக்கும். இதுபோன்ற இடங்களை கண்டறிந்து அங்கு சிறுநீர் கழிப்பவர்களிடம் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்க முடிவு செய்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் இதற்காக தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதற்கான உத்தரவை கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கான அபராத தொகை ரூ.50 என்பது குறைவானதாகவே இருந்த போதிலும் அதனை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் பொது இடங்களில் சுகாதாரத்தை பேண முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த அபராத வசூலுக்கு ரசீது எண்ணையும் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கி உள்ளனர். அதில் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவரின் பெயர் மற்றும் அபராத தொகை ஆகியவை இடம் பெற்றிருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி சட்டம் 1919-ன் படி பொதுஇடங்களில் சிறுநீர் கழிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடமிருந்த போதிலும் அதனை மாநகராட்சி அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருந்து வந்தனர்.

தற்போது சென்னை மாநகரின் சுகாதாரத்தை பேணும் வகையில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ரூ.50 அபராத தொகையை கண்டிப்புடன் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயமாகவே பார்க்கப்படுகிறது. மாநகராட்சி சானிட்டரி இன்ஸ்பெக்டர்கள் இந்த அபராத தொகையை வசூலிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவரா நீங்கள்? உஷாராக இருங்கள். மாநகராட்சி அதிகாரிகள் உங்களை எங்கேயாவது நின்று கண்காணிக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.