;
Athirady Tamil News

சென்னையில் மயானங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் பாதுகாப்பு வசதி செய்யப்படும்- மேயர் பிரியா தகவல்!!

0

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுபடுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேயர் பிரியா பேசும்போது கூறியதாவது:- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சிக்கு சொந்தமான 209 மயான பூமிகள் உள்ளன. இந்த மயான பூமிகளில் உடல்களை எரித்தல் மற்றும் புதைத்தல் பணி சேவைகள் சென்னை மாநகராட்சியால் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இலவச சேவையினை அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும் மயான பூமிகளில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மயான பூமிகளில் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அதற்குண்டான அறிவிப்புப் பலகைகளை மயான பூமிகளின் வாயிலில் பொது மக்கள் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும்.

இதுகுறித்து தகவல்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மயான பூமியில் நுழைவுப் பகுதியை அழகுபடுத்தி, உட்புறங்களில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். இங்கு வரும் பொது மக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும், கழிப்பறை பயன்பாடுகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டு வதைத் தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த மயான பூமிகளின் பயன்பாடுகளுக்காக தனிச் செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மயான பூமிகளை பசுமையாகப் பராமரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், நீரூற்றுகள் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தையும் மார்ச் மாத இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இரவு நேரங்களில் ஒரு பாதுகாவலரை நியமித்தல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர் ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வட்டார துணை ஆணையாளர்கள் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.பி.அமித், எம்.சிவகுரு பிரபாகரன், தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், மாநகர நல அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.