சரியும் அதானி பங்குகள்.. முதலீட்டாளர்களை பாதுகாப்பது எப்படி? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
அதானி குழுமம் முறைகேடு செய்திருப்பதாக கூறி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா, விஷால் திவாரி ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்த மனுவில், “அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை தொடுத்த தாக்குதலால், அதானி நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது, முதலீட்டார்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் பணம் வீணானது.
நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலில் அதிகாரிகளால் எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்க முடியவில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கில், மத்திய அரசுடன் இந்திய ரிசர்வ் வங்கி, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி உள்ளிட்ட அமைப்புகள் பிரதிவாதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்பு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். குறிப்பாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் நாதன் ஆண்டர்சனை விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா வாதிட்டார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆய்வு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் விஷால் திவாரி வாதிட்டார்.
வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், ‘இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது, இது தொடர்பான அக்கறையை நாம் காட்டவேண்டி உள்ளது. எனவே, முதலீட்டாளர்களை எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? என்ற விவரத்தை செபியிடம் கேட்டு, ஆலோசனை பெற்று திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும்’ என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டு மனுக்கள் மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர். ‘நாங்கள் இதில் தலையிட்டு, இது மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு வழிமுறை இருக்கிறதா? கொள்கை விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.
அது அரசாங்கம் தொடர்புடையது. இந்த நடவடிக்கை விஷயத்தில் இந்திய அரசு ஆர்வமாக இருந்தால், ஒட்டுமொத்த நிலைமை மற்றும் ஆய்வு மேற்கொள்ள நீதிபதி உள்பட நிபுணர்கள் குழுவை அமைக்க பரிந்துரைக்கிறோம்’ என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.