சரமாரி தாக்குதல் நடத்திய ரஷியா… 61 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி உக்ரைன் பதிலடி!!
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கிய ரஷிய படைகள், உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி உள்ளன. மேற்கத்திய நாடுகளின் உதவியால் ரஷியா தொடர்ந்து ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷிய படைகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுவருகிறது. ஆரம்பத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என கூறி தாக்குதல் நடத்திய ரஷியா, பின்னர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்நிலையங்கள் என முன்னேறி ஆக்ரோஷமாக தாக்குதல்களை நடத்துகிறது.
இதில் அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷியா இன்றும் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மொத்தம் ரஷியா தரப்பில் 71 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை மற்றும் ராணுவத்தின் பிற படைப்பிரிவினர் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் வான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
பெரும்பாலான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்தார். ரஷியாவால் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாததால் மக்களை தொடர்ந்து பயமுறுத்துகிறது. உக்ரேனிய எரிசக்தி அமைப்பை அழித்து, உக்ரேனியர்களுக்கு மின்சாரம், லைட், தண்ணீர் சப்ளை கிடைக்காமல் செய்வதற்காக மற்றொரு முயற்சி இது என்றும் அவர் குறிப்பிட்டார்.