இந்தியாவில் ஜனநாயக அமைப்புகளின் மாண்பு சிதைப்பு: அமெரிக்க வெளியுறவு கமிட்டி அறிக்கை!!
இந்தியாவை தனது முக்கிய கூட்டாளியாக அமெரிக்க கருதினாலும் ராணுவ தளவாடங்களுக்காக ரஷ்யாவைதான் இந்தியா நம்பியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு துறை கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் வெளிவிவகார கமிட்டியின் தலைவர் ராபர்ட் மெனடென்ஸ் இந்தோ-பசிபிக் ராணுவ உத்தி தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை தயாரித்துள்ளார். அதில், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ரீதியாக வெற்றி பெற வேண்டுமானால் அரசு ரீதியான அணுகுமுறை தேவை. இது தொடர்பான உத்திகள் குறித்து அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஒரு ஆண்டுக்கு முன் வெளியிட்ட அறிக்கையிலும் இதே முறையை பின்பற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்திகள் முறையாக பின்பற்றப்படுமானால், இதில் வெற்றி கிட்டும். இந்தோ -பசிபிக் உத்திகளை சீனாவுடனான போட்டியாக கருதக்கூடாது. இதில், அந்த பிராந்தியத்தில் உள்ள கூட்டணி நாடுகளின் சவால்களையும் அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி உள்ளது. வலுவான ஜனநாயக ரீதியிலான இந்தியாவை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும். ராணுவ ரீதியாக இந்தியாவை தனது முக்கிய கூட்டாளி என்ற சரியான முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. ராணுவ தளவாடங்களுக்காக ரஷ்யாவை இந்தியா நம்பியிருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புகளின் மாண்புகளை சிதைத்து வரும் நடவடிக்கைகள் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.