பிரதமர் மோடியின் புனித பசு கவுதம் அதானி: உத்தவ் சிவசேனா விமர்சனம்!!
இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில் காதலர் தினத்தை ‘பசு தழுவுதல் தினம்’ ஆக கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்து இருந்தது. நேர்மறை சக்தியை பரப்பவும், மகிழ்ச்சிக்காவும் இந்த முயற்சியை முன்எடுத்து இருப்பதாக விலங்குகள் நலவாரியம் தெரிவித்தது. இதற்கு சில பா.ஜனதா தலைவர்களும் ஆதரவு அளித்தனர். அதே நேரத்தில் விலங்குகள் நல வாரியத்தின் முன்எடுப்பை கேலி செய்தும் சமூகவலைதளத்தில் மீம்ஸ்கள் பரவின. இந்தநிலையில் விலங்குகள் நல வாரிய முடிவுடன், தொழில் அதிபர் கவுதம் அதானி விவகாரத்தை ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே சிவசேனா விமர்சித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:- அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் அதானி மோசடி பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. அதானி மோசடி பற்றி மக்கள் பிரதமரிடம் இருந்து விளக்கத்தை கேட்டனர். ஆனால் மோடி அரசு மீண்டும் மக்களை அமைதியாக்க மதத்தை ஒரு டோஸ் கொடுத்து உள்ளது. மோடி அதானி பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை. ஆனால் அவர்களின் அரசு பசு மாடு பற்றி பேசுகிறது. அதானி பங்கு சந்தையின் பெரிய எருது. ஆனால் மோடிக்கு அவர் புனிதமான பசு.
பிரதமர் அதனை தழுவிக் கொண்டுள்ளார். அதன் பிடியை தளர்த்த அவர் தயாராகயில்லை. பல மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அவர்கள் ராமர் கோவில், பசு மாடுகளை கூறி ஓட்டு கேட்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தொழில் அதிபர் கவுதம் அதானி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.