;
Athirady Tamil News

குலசேகரபட்டினத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்!!

0

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் புதிய ரக ராக்கெட்டான எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதைத்தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:- இஸ்ரோ குழுவில் தற்போது புதிய ரக ராக்கெட்டை இணைத்துள்ளோம். இதன் மூலம் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தி உள்ளோம். இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட்டில் ஏற்பட்ட குறைபாடுகளைக் கண்டறிந்து, வெகு விரைவாக டி-2 ராக்கெட்டை தயாரித்து செலுத்தியுள்ளோம்.

இப்போதைக்கு எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். தமிழகத்தின் குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவப்படும். வரும் மார்ச் 2-வது வாரத்துக்கு மேல், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒன்வெப் நிறுவனத்துக்கு சொந்தமான 36 செயற்கைக்கோள்கள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 எல்.எம்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. அதேபோல் மார்ச் இறுதியில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவப்படவிருக்கிறது.

மீண்டும் உபயோகிக்கக்கூடிய ராக்கெட்டுக்கான பரிசோதனையை சித்திரதுர்கா மையத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறோம். மனிதர்களை விண்ணுக்கு சுமந்துசெல்லும் ககன்யான் திட்டம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடலில் வீரர்களை பத்திரமாக இறக்குவது பற்றிய பரிசோதனை நடந்துவருகிறது. இந்த ஆண்டு மற்றொரு ராக்கெட்டை ஏவ இருக்கிறோம். குறிப்பாக, ஆளில்லா ராக்கெட்டையும் விண்ணில் ஏவ உள்ளோம்.

அதேபோல் இந்த ஆண்டு இறுதியில், இந்தியா-அமெரிக்காவின் கூட்டுத்திட்டமான நிசார் செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் மூலம் ஏவ இருக்கிறோம். இதுதவிர பல பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளும் இந்த ஆண்டு ஏவப்பட உள்ளன. ஆசாதிசாட் செயற்கைக்கோளை வடிவமைத்து வெற்றிகரமாக உருவாக்கிய இளம் குழுவினருக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.