உளவு பலூன் பறந்த விவகாரம்; 6 சீன நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் சேர்ப்பு: அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!!
அமெரிக்காவில் பறந்த சீன பலூன் விவகாரம் தொடர்பாக, சீனாவின் 6 நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் அமெரிக்க வர்த்தக அமைச்சகம் சேர்த்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொன்டானாவில் கடந்த சில நாட்களுக்கு முன் சீன உளவு பலூன் பறந்தது கண்டறியப்பட்டது. அதேபோல் தெற்கு கரோலினா கடற்கரையில் மற்றொரு சீன உளவு பலூன் பறந்தது. அமெரிக்காவின் உளவுத்துறை தகவல்களை சேகரிக்க இந்த பலூன் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா கூறியது. இதைத் தொடர்ந்து, தனது வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தையும் அமெரிக்கா ரத்து செய்தது. இருப்பினும், இந்த பலூனானது வானிலை கண்காணிப்பு பலூன் என்று சீனா கூறிவருகிறது.
இந்த பலூன் விவகாரம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளை பாதிக்காது என்றும், அதேநேரம் அமெரிக்காவின் இறையாண்மையை மீறுவதாக உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறினார். இந்நிலையில் பலூன் பறக்கவிடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய பெய்ஜிங் நாஞ்சியாங் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி நிறுவனம் உள்ளிட்ட 6 சீன நிறுவனங்களை ஏற்றுமதி தடைப் பட்டியலில் (கறுப்பு பட்டியல்) அமெரிக்கா வர்த்தக அமைச்சகம் சேர்த்துள்ளது. அதனால் மேற்கண்ட நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அமெரிக்காவில் சந்தை படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.