;
Athirady Tamil News

ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடு பணி ஆய்வு!!

0

ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகளை தேவஸ்தான இணை அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (மார்ச்) 30-ந்தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்க உள்ளது. அதையொட்டி முன்னேற்பாடு பணிகளை 2 மாதங்களுக்கு முன்பே திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தொடங்கினர். இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் மற்றும் கல்யாண மண்டபங்களில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பல்வேறு துறை அதிகாரிகளுடன் துறை சார்ந்த பணிகளின் நிலவரங்கள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் நிருபர்களிடம் வீரபிரம்மன் கூறுகையில், ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலில் நடக்க உள்ள பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் கால அட்டவணைக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 5-ந்தேதி சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.

கோவிலின் நுழைவு வாயில்கள், கேலரிகள், அன்னப்பிரசாதம், குடிநீர் ஏற்பாடுகள், நடனம் மற்றும் இசை உள்ளிட்ட ஆன்மிக கலாசார நிகழ்ச்சிகள், மலர் மற்றும் மின் அலங்காரங்கள், பாதுகாப்பு போன்ற ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழா தொடர்பாக தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டி அனைத்து அதிகாரிகளுடனும் ஆய்வுக்கூட்டத்தை நடத்துவார், எனத் தெரிவித்தார்.

ஆய்வின்போது என்ஜினீயர்கள் நாகேஸ்வர ராவ், வெங்கடேஸ்வருலு, சுமதி, கோவில் துணை அதிகாரிகள் நடேஷ்பாபு, சுப்பிரமணியம், குணபூஷன்ரெட்டி, சந்திரசேகர், கூடுதல் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சுனில் குமார், பூங்கா இலாகா அதிகாரி சீனிவாஸ், சிறப்பு கேட்டரிங் அதிகாரி ஜி.எல்.என்.சாஸ்திரி, பப்ளிகேஷன்ஸ் பிரிவு சிறப்பு அதிகாரி ராமராஜு மற்றும் பிற அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக, ராஜம்பேட்டை மாவட்டத்தில் உள்ள 108 அடி உயரம் அமைக்கப்பட்டுள்ள தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் உருவச்சிலையில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.