போனில் அடிக்கடி பேசியதால் மகளை மாடியில் இருந்து தள்ளிவிட்ட தந்தை!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் எட்லபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் வர பிரசாத் (வயது 48) இவரது மகள் காவ்யா அங்குள்ள தனியார் கல்லூரியில் இடைநிலை முதலாமாண்டு படித்து வருகிறார். வீட்டில் இருக்கும்போது காவ்யா செல்போன்களில் அவரது தோழியுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார். இது அவரது தந்தைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் மகளை கண்டித்தார். இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய காவ்யா தனது தோழி ஒருவருடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் குடிபோதையில் வரபிரசாத் வீட்டுக்கு வந்தார். மகள் போனில் பேசியதை கண்ட அவர் ஆத்திரம் அடைந்தார்.
மகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன் யாருடன் செல்போனில் பேசுகிறாய் என்று கேட்டு தாக்கினார். தந்தையின் கொலை வெறி தாக்குதலால் பீதியடைந்த மாணவி அவரிடமிருந்து தப்பி ஓடினார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் பக்கத்து வீட்டு மாடியில் ஏறினார். அவரை விரட்டிச் சென்ற வரபிரசாத் பக்கத்து வீட்டு மாடியில் வைத்து காவ்யாவை மடக்கி பிடித்தார். மேலும் காவ்யாவை அடித்து அவரது கழுத்தை பிடித்து இழுத்து வந்து மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் காவ்யாவிற்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சுயநினைவை இழந்தார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாணவியை மீட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எட்லபாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வர பிரசாத்தை கைது செய்தனர்.