பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 200வது நாளாக பொதுமக்கள் போராட்டம்!!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி சென்னையின் 2-வது விமான நிலையமான, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுமென மத்திய, மாநில அரசுகள் அறிவித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இன்று 200-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஏகானாபுரம் கிராம மக்கள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளையும், நிலம் எடுக்கும் பணிகளையும் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஏற்கனவே கிராம உரிமை மீட்பு பேரணியை நடத்தினார்கள்.
ஏகானாபுரம் அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள் என சுமார் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன முழக்கங்களோடு பேரணியில் சென்றவர்கள் 500 மீட்டர் தூரத்தில் அம்பேத்கர் திடல் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த 21-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 3 அமைச்சர்கள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதை தொடர்ந்து போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்தனர். அதை தொடர்ந்து தங்கள் கிராமத்திற்கு வந்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இன்று 200-வது நாள் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.
பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு போராட்டத்தில் சட்டம் ஒழுங்கை காக்க போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி.க்கள், 28 டிஎஸ்பிக்கள், 42 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 81 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.