அமெரிக்காவில் சீன உளவு பலூனைத் தொடர்ந்து 40,000 அடி உயரத்தில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு: போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது!!
அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்ததைத் தொடர்ந்து, மற்றொரு மர்மப் பொருள் 40,000 அடி உயரத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த மர்ம பொருள் போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமெரிக்காவில் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதி வான்பரப்பில் கடந்த மாதம் 30ம் தேதி ராட்சத பலூன் ஒன்று பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ராணுவ நிலைகளையும், ஆராய்ச்சி மையங்களையும் உளவு பார்க்க சீனா அனுப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனை சீனா மறுத்தது. இதற்கிடையே, 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த சீன உளவு பலூனை அமெரிக்கா தனது எப்-22 போர் விமானம் மூலம் கடந்த 4ம் தேதி சுட்டு வீழ்த்தியது.
இந்நிலையில், அலாஸ்கா வான்பரப்பில் மற்றொரு மர்மப்பொருள் பறப்பதை அமெரிக்க ராணுவம் கடந்த வியாழக்கிழமை இரவு கண்டறிந்தது. அலாஸ்காவில் இருந்து வடகிழக்காக நகர்ந்து கொண்டிருந்த மர்ம பொருள் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இதனால் உடனடியாக அதனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் மதியம் 1.45 மணி அளவில் கனடா எல்லைக்கு அருகே வடக்கு அலாஸ்காவின் வான்பரப்பில் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயாலளர் பேட் ரைடர் மற்றும் வெள்ளைமாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி ஆகியோர் கூறியிருப்பதாவது: புதிய மர்மப் பொருள் சிறிய கார் அளவுக்கு இருந்தது. அது சீன உளவு பலூனை விட அளவில் சிறியது. ஆனால் 40,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால், பயணிகள் விமானம் மீது மோதுவதற்கான அபாயம் இருந்தது. எனவே உடனடியாக சுட்டு வீழ்த்த அதிபர் பைடன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அதே எப்-22 போர் விமானம் மற்றும் ஏஐஎம்-9எக்ஸ் ஏவுகணையும் வெடிமருந்துகளும் பயன்படுத்தி வெற்றிகரமாக மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதன் எஞ்சிய பாகங்கள் அலாஸ்காவின் உறைந்த கடல் பகுதியில் விழுந்துள்ளன. அவற்றை சேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இப்போதைக்கு அந்த மர்மப் பொருள் உளவு பார்க்க அனுப்பப்பட்டதா, அது எந்த நாட்டிற்கு சொந்தமானது, அதில் என்ன மாதிரியான கருவிகள் இருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெளிவாக தெரியாது. ஆய்வுக்கு பின் உறுதிபடுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். அமெரிக்க வான் பரப்பில் 2வது முறையாக ஆளில்லா மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* உளவு பலூன் விவகாரத்தில் 6 சீன நிறுவனங்களுக்கு தடை
ஏற்கனவே சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனின் எஞ்சிய பாகங்களை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. அது வானிலை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட பலூன் தவறுதலாக அமெரிக்க வான் பரப்பில் சென்று விட்டதாக சீனா கூறுகிறது. ஆனால், கைப்பற்றப்பட்ட பலூனின் எஞ்சிய பாகங்களில் உளவு கருவிகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும், 40 நாடுகளின் வான்பரப்பில் இதே போன்ற பலூன்களை அனுப்பி சீனா உளவு பார்ப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, அமெரிக்காவில் செயல்படும் 6 விமான தொழில்நுட்ப சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.