பாக்.கில் மின்சாரத்துக்கு கூடுதல் வரி!!
பாகிஸ்தான் அரசு வருவாயை பெருக்கும் வகையில் மின்சாரத்துக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடன், பெட்ரோலிய செல்வுகள், குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் கடும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது. மின்சாரம், காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ரூ.269.27 ஆக சரிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இருந்து கடன் பெறுவதற்கு அந்த நாடு முயற்சி செய்து வருகிறது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐஎம்எப் அமைப்பின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு பாகிஸ்தானுக்கு வந்தனர். பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பினர் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாத நிலையில் ஐஎம்எப் குழுவினர் அமெரிக்கா புறப்பட்டு சென்றனர். ஐஎம்ப்பிடம் கடன் பெற வேண்டும் என்றால் வருவாய் மற்றும் நிதி நிலையை மேம்படுத்துவதற்கான திட்டம் வகுக்க வேண்டும். ஒப்பந்தம் செய்வதற்கு முன் ஐஎம்எப்பின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய ரூ.14 லட்சம் கோடி திரட்ட வேண்டும். அதன்படி,மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.39 கூடுதல் வரி விதிக்க அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.