துருக்கியில் 8 வயது சிறுமியை உயிருடன் மீட்டது இந்திய பேரிடர் மீட்பு படை!!
கடந்த திங்கட்கிழமை அதிகாலை நேரத்தில் துருக்கி சந்தித்த பயங்கர நிலநடுக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. பல மாடி கட்டிடங்கள், குடியிருப்புகள் எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் தரைமட்டமாகின. அதன் அண்டை நாடான சிரியாவிலும் இந்த நிலநடுக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இவ்விரு நாடுகளிலும் இடிபாடுகளை அகற்றும் பணி, மீட்புப்பணி கொட்டும் பனிக்கு மத்தியில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. துருக்கியையும், சிரியாவையும் கதி கலங்க வைத்த இந்த நிலநடுக்கம், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டுள்ளது. துருக்கியில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், சிரியாவில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேரும் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழந்திருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் துருக்கிக்கும், சிரியாவுக்கும் நெருக்கடியான இந்த தருணத்தில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் கைகொடுத்து வருகின்றன. குறிப்பாக இந்தியா துருக்கி, சிரியா நாடுகளுக்கு ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் உதவி வருகிறது.
இதற்காக இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய ராணுவத்தின் டாக்டர்கள் குழு துருக்கி சென்றுள்ளன. அவை தொடர்ந்து துருக்கி மக்களுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில், காசியன்டெப் நகரில் நேற்று பகல் 3.45 மணிக்கு இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் 8 வயது சிறுமியை தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டுள்ளது. இதை அந்தப் படை டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அந்தப்பதிவில், “கடின உழைப்பும், ஊக்கமும் கை கொடுத்து இருக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், துருக்கி ராணுவத்துடன் சேர்ந்து மேலும் ஒரு சிறுமியை (8 வயது) மீட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது. அந்தச் சிறுமிக்கு இதன் மூலம் மறுவாழ்வு கிடைத்திருக்கிறது.
அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் அதே காசியன்டெப் நகரில் பேரென் என்ற பகுதியில் இடிபாடுகளில் இருந்து 6 வயது சிறுமி ஒருவரை தேசிய பேரிடர் மீட்பு படை மீட்டது நினைவுகூரத்தக்கது. இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார். துருக்கியில் உள்ள இஸ்பென்டெரன் நகரில் இந்திய ராணுவம் 30 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக ஆஸ்பத்திரியை அமைத்து, இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
காசியன்டெப் மாகாணத்தின் நுர்டாக் என்ற இடத்தில் இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று மீட்பு படையினரால் மீட்கப்பட்டனர். இது அந்த குடும்பத்தினருக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ளது. மீட்பு படையினரும் கடவுள் பெரியவர் என கூறி கொண்டாடினர். நிலநடுக்கத்தின் கோரத்தாண்டவத்தால் நிலை குலைந்துபோயுள்ள துருக்கி, சிரியாவில் 4 லட்சம் பேருக்கு உலக சுகாதார நிறுவனம் உதவிக்கரம் நீட்டி உள்ளது. அவர்களுக்காக 72 டன் அவசர கால அறுவை சிகிச்சை மருந்துகள், கருவிகள் உள்ளிட்டவற்றை இரு நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் அனுப்பி உள்ளது.
இவ்விரு நாடுகளிலும் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் கடும் குளிரை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு குறைவான அளவில்தான் தங்குமிடம், உணவு, தண்ணீர், மருத்துவ பராமரிப்பு கிடைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. துருக்கி, சிரியா நாடுகளுக்கு உதவுவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, “மக்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம்” என தெரிவித்தார்.