தெற்கு ஆசியாவின் வாயிலாக திரிபுரா மிக விரைவில் மாறும் – பிரதமர் மோடி!!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தலாய் மாவட்டத்தின் அம்பாசாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரசுக்கும், இடதுசாரிகளுக்கும் ஏழைகளை எப்படி ஏமாற்றுவது என்பது மட்டுமே தெரியும். அவர்களை தங்கள் கவலைகளில் இருந்து ஒருபோதும் விடுவிக்கமாட்டார்கள். ஆனால் பா.ஜ.க.வோ உங்களின் கவலைகளைப் போக்குவதற்கு ஒரு வேலைக்காரன் போல, ஒரு உண்மையான பங்காளி போல இரவு, பகலாக பணியாற்றி வருகிறது. திரிபுராவில் கிராமங்கள் தோறும் ஆப்டிக்கல் பைபர் நிறுவப்பட்டு வருகின்றன.
கடந்த 8 ஆண்டுகளில் 3 மடங்கு ஆப்டிக்கல் பைபர் நிறுவப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க.வின் இரட்டை என்ஜின் அரசு இந்த திசையில் செயல்படுவதால், தெற்கு ஆசியாவின் வாசலாக திரிபுரா மிக விரைவில் மாறப்போகிறது. புதிய இலக்குகளுடன் புதிய நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தோம். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பா.ஜனதா செய்கிறது என்பதையும், உங்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்கிறோம் என்பதையும் எங்கள் உறுதிப்பாடு நிரூபிக்கிறது.
திரிபுராவை வெறும் 5 ஆண்டுகளில் வளர்ச்சியின் பாதையில் பா.ஜனதா கொண்டு வந்திருக்கிறது. ஒரு காலத்தில் திரிபுராவில் ஒரு கட்சி மட்டுமே கொடி ஏற்ற அனுமதிக்கப்பட்டது. போலீஸ் நிலையங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால் இன்று பா.ஜ.க. அரசு திரிபுராவை அச்சம், மிரட்டல் மற்றும் வன்முறையில் இருந்து விடுவித்துள்ளது. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிறுவி இருக்கிறது.
நாடு முழுவதும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக பா.ஜ.க. பாடுபட்டு வருகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வஞ்சகத்தில் ஈடுபட்டுள்ளனர். மோசமான ஆட்சியின் பழைய வீரர்கள் கைகோர்த்துள்ளனர். அவர்களின் பெயர் அல்லது கோஷம் எதுவாக இருந்தாலும், அவர்களுக்குப் போகும் ஒவ்வொரு வாக்கும் திரிபுராவை பின்னுக்குத் தள்ளும். எனவே வாக்குப்பதிவின் போது தாமரையின் பட்டனை அழுத்தினால் போதும் என தெரிவித்தார்.