முஸ்லிம்களின் முதல் தாயகம் இந்தியா- ஜாமியத் தலைவர் மதானி பேச்சு!!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு எந்த அளவு இந்தியா சொந்தமானதோ, அதே அளவு எனக்கும் இந்தியா சொந்தமானது என்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மஹ்மூத் மதானி கூறியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஜாமியத் உலமா-இ-ஹிந்த் கூட்டத்தில் மதானி இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது:- இஸ்லாத்தின் முதல் நபி ஆதம் இங்குதான் அவதரித்தார் என்பது இந்த நிலத்தின் தனிச்சிறப்பு. இந்த நிலம் இஸ்லாத்தின் பிறப்பிடமாகவும், முஸ்லிம்களின் முதல் தாயகமாகவும் உள்ளது. எனவே, இஸ்லாம் வெளியில் இருந்து வந்த மதம் என்று கூறுவது முற்றிலும் தவறானது, வரலாற்று அடிப்படையற்றது. இந்தி முஸ்லிம்களுக்கு இந்தியா சிறந்த நாடு.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் எங்களுக்கு எந்த மத, இன விரோதமும் இல்லை. எங்கள் கருத்து வேறுபாடுகள் சித்தாந்தத்தின் அடிப்படையிலானவை. இந்தியாவை உலகிலேயே மிகவும் வளர்ச்சியடைந்த மற்றும் சிறந்த நாடாக மாற்றுவதற்கு இணைந்து பணியாற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பு முன்வரவேண்டும். வெறுப்பு மற்றும் மதவெறி என்ற போர்வையைக் களையும்படி தங்கள் அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தலைவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இந்துக்களும், முஸ்லிம்களும் தீவிரவாதத்தை முறியடித்து ஒருவருக்கொருவர் இணக்கமாக அமைதியாக வாழ வேண்டும். நாட்டில் வெறுப்புணர்வை பரப்புபவர்களின் சதவீதம் மிகக் குறைவு. பெரும்பான்மையான மக்கள் இன்னும் மதச்சார்பற்றவர்களாகவும், சகிப்புத்தன்மையை நம்புபவர்களாகவும் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.