வடக்கு கிழக்கு இளையோர்களுக்குக்கான தலைமைத்துவ கற்கை நெறி ஆரம்பம்!! (படங்கள்)
வவுனியா பல்கலைக்கழக வியாபாரக்கற்கைகள் பீடத்தின் தொழில் சமூகத்தொடர்பு மையத்தின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு இளையோர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சி நெறியானது நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனம் (UNDP) மற்றும் ஏனைய பங்காளர்களான சமூக அபிவிருத்தி நிறுவனங்களின் அனுசரணையுடன் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக ஐந்து நிலையங்களில் எட்டுப்பிரிவுகளாக இக்கற்கை நெறியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இரு பிரிவுகளாக இக்கற்கைநெறியானது ஆரம்பமானது. இதன் இணைப்பாளரும் விரிவுரையாளருமான சிவப்பிரகாசம் சிவநேந்திரா, பீடாதிபதி பேராசிரியர் பாலசுந்தரம் நிமலதாசன் மற்றும் வவுனியாப் பல்கலைக்ழகத்தின் சந்தைப்படுத்தல் துறைத்தலைவர் சூ. அ. யூட் லெயோன் தலைமையிலும் ஏனைய விரிவுரையாளர்களின் பங்குபற்றலுடன் இரு பிரிவுகளாகவும், கிளிநொச்சியில் விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வசந்தரூபா தலைமையில் இரு பிரிவுகளாகவும், திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் வணிக பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பாஸ்கரன் மற்றும் துறைத்தலைவர் திருமதி வித்யா தலைமையில் ஒரு பிரிவும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ஜெயராஜ்யின் ஒத்துழைப்புடன் மற்றும் வவுனியாப் பல்கலைகழகத்தின் வியாபாரக் கற்கைநெறியின் பீடாதிபதி கலாநிதி யோ.நந்தகோபன் தலைமையில் மற்றும் பல விரிவுரையாளர்கள் பங்குபற்றலுடன் இரு பிரிவுகளாகவும் இக் கற்கை நெறியானது ஆரம்பமானது.
அதுமட்டுமன்றி வவுனியாப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் தலைமையில் ஏற்கனவே இக்கற்கை நெறியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.இக்கற்கை நெறியினூடாக இளையோருக்கு தலைமைத்துவப் பயிற்சியும் தொழில் வழிகாட்டலும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”