13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன – வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா!!
மறுமலர்ச்சியை நோக்கி வட மாகாணத்தில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அவ்விதமான அனைத்துச் செயற்பாடுகளும் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (11) நடைபெற்ற இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட யாழ். கலாசார நிலைய கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண கலாசார நிலையமானது கலைகள், நம்பிக்கைகள் மற்றும் கலாசாரம் என்பவற்றை கொண்டாடும் வகையில் எமது செழிப்பான பிராந்திய வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அது, அற்புதமான வசதிகளைக் கொண்டதாகவும் உபகண்டத்திலுள்ள கலைகளுக்கு ஒரு அடையாளச் சின்னமாகவும், உலகளாவிய பல நகரங்களில் உள்ள வசதிகளை பின்பற்றுவதாகவும் அமைந்துள்ளது.
இந்த நன்கொடையை எமக்கு வழங்கியமைக்காக இந்திய அரசுக்கும் அதன் மக்களுக்கும் நன்றி உடையவர்களாக இருக்கின்றோம்.
இக்கொடையானது கலை உலகத்துடன் எம்மை இணைப்பதுடன் அதனை சென்றடையவும் வைக்கின்றது.
அதேநேரம் வெளிநாட்டிலுள்ள இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்காக தடையற்ற நிலைபேறான அணுகுதலையும் தங்கியிருத்தலையும் செயற்படுத்த அரசானது தற்போது விசா நடைமுறையினை வடிவமைத்து வருகின்றது.
வடக்கில் பல வகையான வெளிநாட்டு கலாசார செல்வாக்குகள். ஆன்மிகத் தொடர்புகள் காணப்படுகின்றன. இத்தகைய காரணங்களுக்காக மக்கள் இந்தியாவுக்குச் செல்வதுடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் பயணிக்கின்றனர்.
தற்போது விமானங்கள் கிட்டத்தட்ட முழு எண்ணிக்கையான பயணிகளுடன் இயங்குகின்றன. பயணப் படகுகள் ஆரம்பிப்பதற்கு தயாராகவுள்ளன என்றார்.