அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அமைக்க திட்டம் உள்ளதா? டெல்லி மேல்சபையில் இரா.கிரிராஜன் எம்.பி. கேள்வி!!
டெல்லி மேல்சபையில் தி.மு.க. எம்.பி. இரா. கிரிராஜன் நாடுமுழுவதும் அனைத்து பிரிவை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை திருத்தி அமைக்க அரசு ஏதாவது திட்டம் வைத்துள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மந்திரி ராமேஷ்வர் தெலி பதில் அளித்து கூறியதாவது:- மத்திய அரசு, குறைந்த பட்ச ஊதியத்தின் அடிப்படை விகிதத்தில் மாறுபடும் அகவிலைப்படியை ஒவ்வொரு ஆறு மாதகால இடைவெளிகளில் மாற்றியமைத்து வருகிறது.
பட்டியலிடப்பட்ட வேலைகளுக்கு பொருந்தக்கூடிய குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 -ல் தற்போது நடைமுறையில் உள்ள வழங்கல்கள் 2019-ம் ஆண்டு ஊதிய சட்ட நெறி முறையின் கீழ் நீக்கப்பட்டுவிட்டது. மத்திய மற்றும் மாநில அளவில் முழுமையாக அனைத்து பகுதிகளுக்கும் பொருந்துமாறு குறைந்த பட்ச அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்குமாறு வலியுறுத்துகிறது.
அரசால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது என்று நெறிமுறை வகுத்து வரையறுக்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட ஊதிய நெறிமுறைகளில் வழங்கப்பட்டவைகள் இன்னும் அமலுக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.