ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!!
மகாராஷ்டிர கவர்னராக இருந்த பகத் சிங் கோஷி யாரி, வயது மூப்பு காரணமாக கவர்னர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இதேபோல் லடாக் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூரும் ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார். இதையடுத்து இந்த 2 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் சில கவர்னர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநில கவர்னர் பதவியுடன் ஒரு சில மாநிலங்களின் கவர்னராக கூடுதல் பதவியும் வகித்து வந்தனர். இதனால் அந்த மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவில் 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் மகாராஷ்டிரா மற்றும் லடாக் கவர்னர்களின் ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார். 13 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, கட்சிக்காக அயராது உழைத்து அந்த கட்சியில் பல்வேறு உயரிய பொறுப்புகளையும் அவர் வகித்து உள்ளார்.
பல்வேறு மாநில தேர்தல்களுக்கும் பொறுப்பாளராக கட்சியால் நியமிக்கப்பட்டு, அதிலும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அவர் ஆற்றிய அந்த பணிக்காக தற்போது மத்திய அரசு கவர்னர் பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் திருப்பூர் ஆகும். இவரது மனைவி பெயர் சுமதி. இவருக்கு ஹரி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். ராதாகிருஷ்ணன் பி.பி.ஏ. பட்டதாரி ஆவார். இவர் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் படித்தார்.
விவசாய பணியிலும் தீவிரம் ஆர்வம் காட்டினார். பாரதிய ஜனதா கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவர். தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்க்க கடுமையாக பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் கோவை பாராளுமன்ற தொகுதியில் 5 முறை போட்டியிட்டுள்ளார். இதில் 1998 மற்றும் 1999-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல்களில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1998 தேர்தலில் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், 1999 தேர்தலில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழக பாரதிய ஜனதா தலைவராகவும் பணியாற்றி உள்ளார். மாநில தலைவராக இருந்த காலத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார். தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்கவும், வலுப்படுத்தவும் இந்த யாத்திரை ஊக்கமாக கருதப்பட்டது.
சமீபத்தில் அவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினராகவும், கேரள மாநில பாரதிய ஜனதா பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். 2016 முதல் 2019 வரை அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார். ஜார்கண்ட் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று அல்லது நாளைக்கு பா.ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலக உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. விரைவில் அவர் ஜார்க்கண்ட் சென்று அந்த மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்று கொள்ள உள்ளார்.
ஜார்கண்டின் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜனதா கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், மணிப்பூர் கவர்னராக பதவி வகித்து வந்தார். தற்போது அவர் நாகலாந்து கவர்னராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அறிவித்தார்.