சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!!
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கோவிலில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்ப வைகானச ஆகம விதிப்படி காலை 8.40 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய கருட கொடியேற்றம், கங்கணப்பட்டர் பாலாஜி ரங்காச்சாரியுலு தலைமையில் நடந்தது. முன்னதாக காலை 6.30 மணியில் இருந்து காலை 8.15 மணி வரை திருச்சி உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து, கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கொடி மரம் அருகே வைக்கப்பட்டனர்.
பிரதான அர்ச்சகர்கள் விஸ்வக்சேனர் வழிபாடு, வாஸ்து ஹோமம், கருட லிங்க ஹோமம், கருட பிரதிஷ்டை, ரக்ஷா பந்தனம் உள்ளிட்டவை நடத்தினர். கொடியேற்றும் விழாவில் பங்கேற்ற திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மோற்சவ விழா வாகனச் சேவைகள் நடக்கின்றன. எனவே விழாவையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. தினமும் காலையில் 8 மணியில் இருந்து காலை 9 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணிவரையிலும் வாகனச் சேவைகள் நடக்கின்றன.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும், என்றார். கொடியேற்றும் நிகழ்ச்சியில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, வைகானச ஆகம ஆலோசகர் மோகன ரங்காச்சாரியுலு, உதவி அதிகாரி குருமூர்த்தி, கண்காணிப்பாளர் செங்கல்ராயலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நேற்று இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
அதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.