தண்டவாளத்தில் திடீர் விரிசல்- சென்னை ரெயிலை கவிழ்க்க சதியா? !!
கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் அருகே மணவெளி பகுதியில் இன்று காலை வழக்கம் போல் செந்தூர் எக்ஸ்பிரஸ் திருச்செந்தூரில் இருந்து கடலூர் முதுநகர் வழியாக சென்னை நோக்கி சென்றது. அப்போது மணவெளி பகுதியில் தண்டவாளத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்ட காரணமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்த போது தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை அங்கு பணியில் இருந்த கேட் கீப்பர் பார்வையிட்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எக்ஸ்பிரஸ் சென்ற பிறகு உடனடியாக ரெயில் நிலைய அதிகாரியிடம் தண்டவாளத்தில் விரிசல் தொடர்பாக தகவல் கொடுத்தார். இதனை தொடர்ந்து ரெயில் நிலைய அதிகாரி உடனடியாக ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது விழுப்புரத்தில் இருந்து காலையில் தினமும் மயிலாடுதுறைக்கு பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக பயணிகள் ரெயிலை பாதி வழியில் நிற்க வைத்தனர். பின்னர் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை தற்காலிகமாக சரி செய்தனர் மேலும் இவ்வழியாக செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் குறைந்த பட்சம் 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டன. மேலும் சுமார் 20 நிமிடம் பிறகு பயணிகள் ரெயிலை மெதுவாக இயக்க வைத்து அனுமதித்தனர்.
பின்னர் ரெயில் அதிகளவில் இல்லாத நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நிரந்தரமாக விரிசலை சரி செய்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது ஏன்? ஏதேனும் ரெயிலை கவிழ்க்க செய்த சதியா? அல்லது எதிர்பாராமல் தண்டவாளத்தில் விரிசில் ஏற்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து ரெயில்வே ஊழியர் உடனடியாக பார்வையிட்டதால் பெரும் ரெயில் விபத்தை தவிர்த்து இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நள்ளிரவு மற்றும் அதிகாலையில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருந்தால் பெருமளவில் ரெயில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி இருக்கும். ஆனால் இதற்கான சூழ்நிலை ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை பொதுமக்கள் பாராட்டினர்.