நாட்டை அழித்தது ராஜபக்ஷர்களே !!
நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்து ஆக்கியது ராஜபக்ஷர்களே என்பதை மக்கள் இன்றும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வங்குரோத்தாக்கியவர்களைப் பாதுகாக்க தனக்கு நெருக்கமான ஒருவரை ஜனாதிபதியாக நியமித்ததும் ஓர் நிதி சார்ந்த குற்றமாகும் என்றும் தெரிவித்தார்.
தற்போதைய ராஜபக்ஷ ஆதரவு அரசாங்கம் அந்த நிதிக் குற்றத்துக்கு காரணமானவர்களைத் தண்டிக்காவிட்டாலும், அந்த நிதிக் குற்றங்களைச்செய்தவர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு, திருடப்பட்ட பணம் அனைத்தும் நாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
சிலாபத்தில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோடிக்கணக்கான தேவையற்ற செலவுகளைச் செய்து சுதந்திரத்தை கொண்டாடி இருக்க வேண்டிய தேவையில்லை எனவும், செலவு செய்யப்பட வேண்டிய பல அத்தியவசிய தேவைப்பாடுகள் உள்ளன என்றும் தெரவித்தார்.
சுதந்திர தினத்தன்று நடமாடும் கழிவறைக்கு 142 இலட்சம் ஒதுக்குவதற்குப் பதிலாக அந்த பணத்தைஏழை மக்களுக்கு சலுகை வழங்க, மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எரிபொருள் மற்றும் உர மானியம்வழங்குவதற்கு ஜனாதிபதியும் அமைச்சர்களும் நினைக்கவில்லையா?,
மனசாட்சி முன்வரவில்லையா? என்று கேள்வியெழுப்பினார்.
மக்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கும்போதும், தங்கள் இயலாமையை மறைத்து, வெற்று சுதந்திரத்தை கொண்டாடி ஏராளமான பணத்தை நாசமாக்கியதாவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் மக்கள் போராட்டத்தினால் நிதியமைச்சர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் நாட்டை விட்டே துரத்தியடிக்கப்பட்ட போதிலும் மொட்டுவின் 134 பேர் தந்திரமாக ராஜபக்ஷவுக்கு விசுவாசமான ஒருவரை மெய்ப் பாதுகாவலராக ஜனாதிபதியாக நியமித்துள்ளனர் என்றும் சஜித் குறிப்பிட்டார்.
ராஜபக்ஷவுக்கு ஆதரவான அரசாங்கத்தை உருவாக்க மக்கள் வீதியில் இறங்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை அழித்து நாட்டை வங்குரோத்தியமாக்கியது ராஜபக்ஷர்களே என்பதை மக்கள் இன்றும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.
ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்ய தாம் வீடு வீடாகச் செல்லவில்லை எனவும்,
சுவரொட்டிகளை ஒட்டவில்லை எனவும், கூட்டங்களை நடத்தவில்லை எனவும், ஆனால் 2005 ஆம் ஆண்டு ராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து அர்ப்பணிப்புகளையும் சிவப்புப் போர்வை போர்த்திய யானை சகோதரர்களே செய்ததாகவும் குறிப்பிட்டார்.
அவர்கள் ஆட்சிக்கு கொண்டு வந்த குடும்பத்தால் தான் நாட்டுக்கு இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான திருடர் குடும்பத்துக்கு நெருக்கமாக செயற்பட்ட சிவப்பு போர்வை போர்த்திய சகோதரர்கள் திருடர்களைப் பிடிப்பதாகக் கூறுவது நகைப்புக்குரியது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொலை, வன்முறை மற்றும் வீடுக்குத் தீ வைத்தல் என்பவற்றிற்கு தாம் எப்போதும் எதிரானவன் எனவும், அகிம்சைஅரசியலில் ஈடுபட்டு வரும் தாம், அரச சொத்துக்களை எரிக்காது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜனநாயகஇளைஞர்களுடன் இணைந்து ராஜபக்ஷக்களால் நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சகல பணத்தையும் மீட்பதற்காக செயற்படுவதாகவும் மேலும் தெரிவித்தார்.