பல உயிர்களைக் காப்பாற்றிய ஜூலி’ – துருக்கி மீட்புப் பணியில் இந்திய மோப்ப நாய்கள் தீவிரம் !!
துருக்கி – சிரியா பூகம்பத்தில் மீட்புப் பணிகளில் உதவிட இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மீட்புக் குழு சிறப்பாக செயல்பட்டு வரும் அதேவேளையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டறிய மோப்ப நாய்கள் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றன.
பூகம்பத்தால் பாதித்த துருக்கியில் இந்திய மீட்புக் குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஐந்து நாட்களாக இந்தப் பணி தொடர்கிறது.
இந்திய மீட்புக் குழுவுடன் ஜூலி, ரோமியோ, ஹனி, ராப்போ என்ற நான்கு மோப்ப நாய்களும் அனுப்பப்பட்டன. இந்த மோப்ப நாய்கள் மீட்புப் பணிகளில் சிறப்பான பயிற்சி பெற்ற நாய்கள். பூகம்பத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள துருக்கியிலும் சிரியாவிலும் இவை அளித்து வரும் பங்களிப்பு முக்கியமானது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மீட்புக் குழுவை சேர்ந்த குர்மிந்தர் சிங் கூறும்போது, “இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை கண்டறிய இந்த மோப்ப நாய் குழு பெரும் உதவி செய்து வருகிறது. அதிலும் அந்தக் குழுவில் உள்ள ஜூலி என்ற பெண் நாய் உயிரோடு இருந்த பலரை இடிபாடுகளில் கண்டறிய உதவியது. இதனால், பல உயிர்கள் காப்பற்றப்பட்டன” என்றார்.
‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்தியாவில் இருந்து மீட்புப் படை வீரர்களுடன் மருத்துவ குழுவினரும் செயலாற்றி வருகின்றனர்.
துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 24,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.