மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் அதிக அளவில் உருவாக்கப்படும்: மந்திரி மாண்டவியா தகவல்!!
குஜராத் மாநிலத்தின் தலைநகரான காந்திநகரில், உலகளாவிய இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கத்தின் 13-வது வருடாந்திர மாநாடு நடந்தது. இதில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நாம் ஒரு புதிய ஆஸ்பத்திரியை திறக்கிறபோது அதற்கு டாக்டர்கள் தேவைப்படுகிறார்கள். 8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் 51 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தன. இன்றைக்கு நாம் 1 லட்சத்து 226 மருத்துவ படிப்பு இடங்களைப் பெற்றிருக்கிறோம்.
மருத்துவ மேற்படிப்பில் 34 ஆயிரம் இடங்கள் இருந்தன. இப்போது அவை 64 ஆயிரமாக உயர்ந்துள்ளன. நாங்கள் மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிப்பு இரண்டின் இடங்களும் சம அளவில் இருக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம். 4 வருடங்களில் இதைச் செய்து முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதைச் செய்து முடித்து விட்டால், மருத்துவ படிப்பு முடிக்கிற அனைவரும், மேற்படிப்பும் படிக்க வாய்ப்பு ஏற்படும். நமது ‘இந்தியாவில் குணமாகுங்கள்’ திட்டம், உலக நாடுகளில் வாழ்கிறவர்களையெல்லாம் இந்தியாவுக்கு அழைப்பது, மலிவான, தரமான மருத்துவம், ஆரோக்கியம், பாரம்பரிய மருந்துகளை வழங்குவதற்கானது.
இதற்கான செயல்முறை தொடங்கி இருக்கிறது. நீங்கள் சுகாதாரத்துறையில் பணியாற்ற விரும்பினால், சங்கிலித்தொடர்போல ஆஸ்பத்திரிகளை கட்ட விரும்பினால், உங்களுக்கான தொழில் வாய்ப்பை நான் உறுதி செய்ய விரும்புகிறேன். உங்களிடம் 50-100 படுக்கை ஆஸ்பத்திரி இருக்குமானால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அங்கீகாரத்தை பெறுங்கள். நீங்கள் தொழில் வாய்ப்பை அடைய முடியும்.
மக்களுக்கு சேவை செய்வதற்கு அது ஒரு வாய்ப்பு. நீங்கள் வணிக ரீதியில் நடத்த விரும்பினால், ஆயுஷ்மான்பாரத் திட்டத்தின்கீழ் செயல்படலாம். இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள ‘ஹீல் இன் இந்தியா, ஹீல் பை இந்தியா’ (இந்தியாவில் குணமாகுங்கள், இந்தியாவால் குணமாகுங்கள்) கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள்- ஆஸ்பத்திரிகள் ஆஸ்பத்திரிகளுக்கு இடையேயும், நாட்டுக்கு நாடு இடையேயும், நாட்டுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் இடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். இவ்வாறு அவர் கூறினார்.